சென்னை, பகிங்ஹாம் கால்வாய் புனரமைப்பிற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவுள்ள நிலையில், அதில் குடியிருப்பவர்கள், 5 கி.மீ., எல்லைக்குள் மாற்று வீடுகளை கேட்கின்றனர்.
சென்னையில் உள்ள பகிங்ஹாம் கால்வாய், வடக்கு, தெற்கு, மத்தியம் என மூன்று வகையாக நீர்வளத்துறையால் பிரிக்கப்பட்டு உள்ளது.
சென்னை வெள்ள தடுப்பு அறக்கட்டளை வாயிலாக, பகிங்ஹாம் கால்வாயை படிப்படியாக புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சோதனை முறையில், சுவாமி சிவானந்தா சாலை முதல் ராதாகிருஷ்ணன் சாலை வரை 2.90 கி.மீ.,க்கு கால்வாய் புனரமைக்கப்படவுள்ளது. இதற்காக, கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரப்படவுள்ளது. பின், கரைகளை பலப்படுத்தி பூங்கா மற்றும் பொழுதுபோக்கு படகு போக்குவரத்து துவக்கப்படவுள்ளது.
இப்பணிக்கு முதற்கட்டமாக 300 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபரில் துவங்குவதற்கு முன், ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக, லாக் நகர், விக்டோரியா ஹாஸ்டல் பின்புறம், மாட்டாங்குப்பம், சிவராஜபுரம், ரோட்டரி நகர் ஆகிய இடங்களில், ஆக்கிரமிப்பு குடிசைகள் மற்றும் வீடுகளை பயோமெட்ரிக் முறையில் கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது.
நீர்வளத்துறை 2011ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி, 1,189 ஆக்கிரமிப்பு குடும்பங்கள் இங்கு வசித்து வந்தன. இது தற்போது, இரு மடங்கு அதிகரித்துள்ளது.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு, திருவொற்றியூர் அருகே கார்கில் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள, தமிழக வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை ஒதுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆனால், எழும்பூர் அல்லது பட்டினப்பாக்கத்தில் தங்களுக்கு வீடு ஒதுக்க வேண்டும் என ஆக்கிரமிப்பாளர்கள் கேட்டுள்ளனர். அங்கு வீடுகளை ஒதுக்க முடியாதபட்சத்தில், 5 கி.மீ., சுற்றளவில் ஏதாவது ஒரு இடத்தில் வீடுகளை வழங்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர். சிலர் 3 கி.மீ., எல்லைக்குள் வீடு கேட்கின்றனர்.
இப்பிரச்னையில் தீர்வு காண்பதற்காக, சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, வருவாய் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் அடங்கிய பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினர் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர்.