சென்னை, 'மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டையை பயன்படுத்தி வாகனங்களை நிறுத்திவிட்டு, அதே நாளில் திரும்ப எடுப்போருக்கு, வரும் 14ம் தேதி முதல், 50 -- 60 சதவீதம் வரை கட்டண சலுகை அளிக்கப்படும்' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னையில் 36 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளது.
இதில், ஒன்பது மெட்ரோ ரயில் நிலையங்களில், இருசக்கர வாகன நிறுத்தும் வசதி மட்டுமே இருக்கிறது.
மெட்ரோ ரயில் பயணியர் மட்டுமல்லாமல், மற்றவர்களும் வாகனங்களை நிறுத்தி செல்வதால் இடநெருக்கடி ஏற்படுகிறது. போதிய இடவசதி இல்லாமல், மெட்ரோ ரயில் பயணியர் அவதிப்பட்டனர்.
இதையடுத்து, வாகனங்களை நிறுத்த, மெட்ரோ பயண அட்டை மட்டுமே ஏற்கும் புதிய முறை, கடந்த மாதம் 19ம் தேதி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மெட்ரோ ரயில் பயணியருக்கு, வரும் 14ம் தேதி முதல் வாகன நிறுத்த கட்டணத்தில், 50 முதல் 60 சதவீதம் வரை கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்த பயணியரை ஊக்குவிக்கும் வகையில், வரும் 14ம் தேதி முதல், மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டையை பயன்படுத்தி வாகனங்களை நிறுத்தி விட்டு, அதே நாளில் திரும்ப எடுக்கும் போது, வாகன நிறுத்தம் கட்டணத்தில் சலுகை வழங்கப்படவுள்ளது.
வாகன நிறுத்த கட்டணத்தில், 50 முதல் 60 சதவீதம் வரை சலுகை அளிக்கப்பட உள்ளன.
மாதாந்திர வாகன நிறுத்தம் அட்டையை பொறுத்தவரை, 30 நாட்களில் பயணியர் மெட்ரோ ரயிலில் மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், இந்த கட்டண தள்ளுபடி வழங்கப்படும். மேலும் விபரங்களை https://chennaimetrorail.org/parking-tariff/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.