திருச்சி:திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள அயன்புதுப்பட்டியைச் சேர்ந்த பிச்சை - அகிலாண்டேஸ்வரி தம்பதிக்கு ஐஸ்வர்யா, வித்யா, 21, காயத்ரி, 20, என, மூன்று மகள்கள் இருந்தனர்.
இதில், வித்யாவும், காயத்ரியும், காங்கேயத்தில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.
நேற்று முன்தினம் அயன்புதுப்பட்டியில் கோவில் திருவிழா நடந்தது. இதற்காக சகோதரிகள் இருவரும், சில நாட்களுக்கு முன் ஊருக்கு வந்திருந்தனர்.
அவர்கள் வீட்டில் இருக்கும் போது, தொடர்ந்து மொபைல்போனில் பேசிக் கொண்டிருந்தனர்.
சந்தேகம் அடைந்த அவர்களது தாய் கேட்டபோது, இருவரும் அதே நிறுவனத்தில் பணியாற்றும் சகோதரர்களை காதலிப்பதாக தெரிவித்தனர். ஆத்திரம் அடைந்த அவர், இருவரின் காதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, கண்டித்தார்.
இந்நிலையில், நேற்று காலை வீட்டை விட்டு சென்ற வித்யாவும், காயத்ரியும், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
அதே பகுதி பெரியவேட்டை என்பவரது கிணற்றில், இருவரும் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
சம்பவம் குறித்து வளநாடு போலீசார் விசாரிக்கின்றனர்.