தஞ்சாவூர்:நடப்பு நிதியாண்டுக்கான பயிர்க் கடன் வழங்குவது தொடர்பான அறிவிப்பை, தமிழக அரசு வெளியிடாததால், கடன் பெறுவதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு ஒவ்வோர் ஆண்டும், பட்ஜெட்டில் பயிர்க்கடன் வழங்குவதற்காக இலக்கு நிர்ணயம் செய்து அறிவிப்பை வெளியிடும். இதற்காக, கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவில் நடக்கும் தொழில்நுட்ப குழுவின் பயிர்க்கடன் அளவு நிர்ணய கூட்டத்தில் அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்பர்.
ஏப்ரல், 1ம் தேதி புதிய பயிர்க்கடன் நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியாகும். ஆனால், இந்த 2023 - 24ம் ஆண்டிற்கான பயிர்க்கடன் நிர்ணயம் தொடர்பாக, அரசு இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை.
இது குறித்து, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலர் விமல்நாதன் கூறியதாவது:
இந்தாண்டு இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. பயிர்க் கடன் நிர்ணயம் என்பது, நெற்பயிருக்கு மட்டும் இல்லை. மலர்கள், பழங்கள், கரும்பு, கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு என அனைத்திற்கும் பொருத்தும்.
டெல்டா மாவட்டங்களில், கோடை பயிர்களுக்கான பயிர்க்கடன் தேவைப்படும் பல விவசாயிகள், பயிர்க்கடன் நிர்ணயம் தொடர்பாக அறிவிப்பு வராமல், கடன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.