கிண்டி பல்நோக்கு மற்றும் முதியோர் நல மருத்துவமனை விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், முறையான பாதையோ, போக்குவரத்து வசதியோ இல்லாததால், நோயாளிகள் வெகுதுாரம் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை, கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில், 230 கோடி ரூபாய் மதிப்பில், 1,000 படுக்கை வசதியுடன், பல்நோக்கு அரசு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மொத்தம், 51,429 சதுர மீட்டர் பரப்பளவில், ஆறு தளங்களுடன் மூன்று கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
அதில், 'ஏ - பிளாக்'கில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு, 'பி பிளாக்'கில் அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, 'சி - பிளாக்'கில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு மற்றும் வார்டுகளுடன் கட்டப்பட்டு உள்ளன.
மருத்துவ கருவிகள் நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு விரைவில் திறந்து வைக்க உள்ளார். இதற்கான பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
அதேபோல், முதியோருக்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட தேசிய முதியோர் நல மருத்துவமனையும் விரைவில் திறக்கப்பட உள்ளது.
இந்த இரண்டு மருத்துவமனைகளும், அருகே அருகே உள்ள நிலையில், மருத்துவமனைக்கான பாதை முறையாக இல்லாத நிலை உள்ளது.
இந்நிலை தொடர்ந்தால், மருத்துவமனை திறப்புக்கு பின், நோயாளிகள் மற்றும் முதியோர் கடும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படும்.
தற்போது, தாம்பரம் மார்க்கத்தில் இருந்து வருவோர், கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கி, நடந்து மருத்துவமனையை சென்றடைய முடியும்.
அதேபோல், சைதாப்பேட்டை ஆட்டுத்தொட்டி அருகாமை பகுதியில் இருந்து வருவோரும், சிறிது துாரம் நடந்து தான் மருத்துவமனைக்கு வர வேண்டியுள்ளது.
மேலும், சென்ட்ரல் மார்க்கத்தில் இருந்து வருவோர் கடும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்.
கிண்டி ரேஸ்கோர்ஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, ரயில் மேம்பாலத்தை கடந்து, கிண்டி ரயில் நிலைய சுரங்கப்பாதை வழியாக, கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிலையம் வந்து, மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
சென்ட்ரல் மார்க்கத்தில் இருந்து ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வந்தால், கத்திப்பாரா மேம்பாலம் சென்று சுற்றிக் கொண்டு திரும்பி, கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிலையம் வழியாக மருத்துவமனையை சென்றடைய வேண்டும்.
அவசர நிலைக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் செல்லும் வகையில் பாதை இல்லை.
முதியோர் மற்றும் நோயாளிகள் சிரமமின்றி மருத்துவமனைக்கு வந்து செல்லக்கூடிய வகையில் பேருந்து நிறுத்தமோ, சாலை வசதியோ இல்லை.
சென்னையில் உள்ள, ராஜிவ்காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்துாரார், ராயப்பேட்டை உள்ளிட்ட மருத்துவமனைகளில் நுழைவு வாயில்களில் பேருந்து நிறுத்த வசதி உள்ளது.
ஆனால், பல்நோக்கு மற்றும் முதியோர் நல மருத்துவமனை ஆகிய இரண்டும் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு இருந்தாலும், அதற்கான வசதி இதுவரை ஏற்படுத்தவில்லை.
கிண்டி ரேஸ்கோர்சில் இருந்து சுரங்கப்பாதை வழியாக வருவோர், கிங் ஆய்வக வளாகத்திற்கு செல்வதற்கான வழி உள்ளது. அந்த சாலை வழியாக, பல்நோக்கு மற்றும் முதியோர் நல மருத்துவமனைக்கு வர முடியும். ஆம்புலன்ஸ் பாதை, பேருந்து நிறுத்தம் போன்றவைக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மா.சுப்பிரமணியன் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்
- நமது நிருபர் -