சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் இரண்டாம் கட்ட அகழாய்வில் தங்க தகடு, தங்க அணிகலன் கண்டெடுக்கப்பட்டது.
வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வில் 12 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட ஆறு குழிகளில் சுடு மண்ணால் ஆன பொம்மை, புகைபிடிப்பான் கருவி, காதணி, எடைக்கல், கண்ணாடி மணிகள், வணிக முத்திரை, சங்கு வளையல்கள், யானை தந்ததால் ஆன பகடை, தக்களி உள்ளிட்ட 1780 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று 2 கிராம் எடை, 8.8 மி.மீ., நீளம், 7.2 மி.மீ., அகலம் கொண்ட தங்க தகடு, 2.2 கிராம் எடை, 4.3 மி.மீ., நீளம் 6.2 மி.மீ., சுற்றளவு கொண்ட அழகிய வேலைப்பாடுடன் கூடிய தங்க அணிகலன் கண்டெடுக்கப்பட்டது.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ''முதல் கட்டத்தைப்போல இரண்டாம் கட்ட அகழாய்விலும் அழகிய வேலைப்பாடுடன் கூடிய தங்கத்தால் ஆன அணிகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவை செய்ய பயன்படும் தங்க தகடும் கிடைத்துள்ளது. முன்னோர்கள், சுடுமண்ணால் ஆன அணிகலன் அணிந்த நிலையில் தங்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பது தெரிய வருகிறது, ''என்றார்.