திருநெல்வேலி:களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்ட அரிசி கொம்பன் யானை கோதையாறு அணை அருகே சுற்றுத்திரிகிறது. தேனி மாவட்டம் கம்பத்தில் சுற்றித்திரிந்த அரிசி கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி அங்கிருந்து பிடிக்கப்பட்டு வனத்துறை வாகனம் மூலம் திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மணிமுத்தாறு அணைக்கு மேல் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்கு கொண்டு வந்து விடப்பட்டது.
இக்காப்பக பகுதியை ஒட்டி உள்ள கன்னியாகுமரிமாவட்டம் முத்துக்குளி வயல் பகுதி புல்வெளிகள் நிறைந்த யானைகளின் வசிப்பிடமாகும். எனவே அரிசி கொம்பன் யானையை நேற்று அதிகாலையில் அங்கு கொண்டு விட்டனர். அங்கிருந்த யானை பகலில் மேல் கோதையாறு அணைப்பகுதிக்கு வந்து அங்கு சுற்றித்திருந்தது.
யானையின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ரேடியோ காலர் கருவி மூலம் அதன் இருப்பிடம் துல்லியமாக தெரியவரும். திருநெல்வேலி மாவட்ட வனத்துறையினர் மற்றும் தேனியில் இருந்து வந்துள்ள வன அதிகாரிகள் கோதையாறு பகுதியில் முகாமிட்டுள்ளனர். யானை மேலும் சில தினங்களுக்கு கண்காணிப்பில் இருக்கும். அங்குள்ள மற்ற யானைக் கூட்டங்களுடன் இணைகிறதா என்பதையும் பார்க்க வேண்டும். ஒரு சில தினங்களுக்கு பிறகு அரிசி கொம்பன் யானைக்கு அந்த பகுதியில் ஒவ்வாமை ஏற்பட்டால் மீண்டும் மக்கள் வசிப்பிடம் நோக்கி அரிசி, சர்க்கரை என ரேஷன் கடை உணவு பொருட்களை தேடி வரக்கூடும் என்பதால் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.