போடி:போடியில் பயன்பாடின்றி இருந்த காபி சுத்திகரிப்பு தொழிற்சாலையில் மத்திய கூட்டுறவு அமைச்சகம் சார்பில் ரூ.2 கோடி செலவில் உணவு தானிய கிடங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் போடி புதுாரில் 55 ஆண்டுகளுக்கு முன் போடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் 8 ஆயிரம் சதுர அடியில் காபி சுத்திகரிப்பு தொழிற்சாலை துவக்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து நல்ல வருவாய் ஈட்டியது. பின்னர் காபி விலை வீழ்ச்சியால் தொழிற்சாலை பல ஆண்டுகளாக செயல்படாமல் முடங்கியது. கூட்டுறவு வங்கிக்கு பல லட்சம் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சேமிப்புக் கிடங்கு அமைக்க மத்திய கூட்டுறவு அமைச்சகம் திட்டமிட்டது. முதல் கட்டமாக தேனி மாவட்டம், சில்லமரத்துப்பட்டி தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக போடி புதூரில் செயல்படாமல் உள்ள காபி தொழிற்சாலை இடத்தில் 1000 டன் உணவு தானிய சேமிப்பு கிட்டங்கி கட்டப்பட உள்ளது.
வருமானத்தில் கடனை திரும்ப செலுத்தும் வசதி
எம்.ராதா, போடி கூட்டுறவு சார்பதிவாளர்: இந்திய உணவு கழகம் தேனி மாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.2 கோடி செலவில் உணவு கிடங்கு அமைக்க திட்டமிட்டது. கிடங்கு அமைக்க கூட்டுறவு சங்கம் 20 சதவீத பங்களிப்பு நிதி வழங்க வேண்டும். எனவே லாபத்தில் செயல்படும் சில்லமரத்துப்பட்டி தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் மூலம் உணவு கிடங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டது. சில்லமரத்துப்பட்டியில் இடம் இல்லாததால் போடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான காபி டிப்போ தேர்வானது. இங்குள்ள 4 ஏக்கரில் ஒரு ஏக்கரில் தானிய கிடங்கு அமைக்கப்பட உள்ளது.
இதற்காக மண் பரிசோதனை, நிலஅதிர்வு தன்மை உட்பட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 20 சதவீதம் பங்களிப்பு நிதியாக ரூ. 40 லட்சம் சில்லமரத்துப்பட்டி தொடக்க கூட்டுறவு சங்கமும், ரூ.1.60 கோடியை நபார்டு வங்கியும் வழங்க உள்ளன. இக்கடனை 5 ஆண்டுகளில் திரும்ப செலுத்த வேண்டும். வாடகையாக ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் போடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு செலுத்த வேண்டும். இதற்காக 34 ஆண்டுகள் வாடகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
தானிய கிடங்கு வாடகைக்கு விடுவதால் கிடைக்கும் வருமானத்தில் கடனை திருப்பி செலுத்த முடியும், என்றார்.
வரவேற்கிறோம்
எம்.சரவணன், தலைவர், சில்லமரத்துப்பட்டி தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் : போடியில் தானிய சேமிப்புக் கிடங்கு அமைவதை வரவேற்கிறோம். இதன் மூலம் தானியங்கள் வீணாவது தடுக்கப்படும். விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவு குறைந்து நல்ல விலை கிடைக்கும். வங்கி வளர்ச்சியுடன் விவசாயிகள் பயன் அடைவார்கள். மேலும் கூட்டுறவு சங்கம் பங்களிப்பு தொகை 20 சதவீதத்தையும் அரசு மானியமாக வழங்கினால் நல்லது, என்றார்.