தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்காரத் தெருவைச் சேர்ந்தவர் லுாப்னா. திருநெல்வேலி கே.டி.சி. நகர் ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி.
இவர்கள் இருவரும் தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.சி. கோச்சில் நேற்று முன்தினம் பயணம் செய்தனர். ஒரே கலரில் இருவரின் டிராவல் சூட்கேஸூம் இருந்தால் லுாப்னா தவறுதலாக ஸ்ரீதேவியின் சூட்கேஸை எடுத்துக்கொண்டு பட்டுக்கோட்டையில் இறங்கி விட்டார்.
இந்நிலையில் ஸ்ரீதேவி திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று சூட்கேசை திறந்து பார்த்தபோது சூட்கேசில் இருந்து நகைகளை காணவில்லை உடைகளும் மாறி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து திருநெல்வேலி ரயில்வே போலீசாரிடம் ஸ்ரீதேவி புகார் அளித்தார். அதேநேரம் லுாப்னாவும் தனது சூட்கேஸ் மாறி இருப்பதை வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு மீண்டும் பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.
இரண்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்திய பின் நேற்று முன்தினம் இரவு மீண்டும்ஸ்ரீதேவி பட்டுக்கோட்டைக்கு வரவழைக்கப்பட்டு அவரிடம் ரயில்வே போலீசார் முன்னிலையில் லுாப்னா சூட்கேஸை ஸ்ரீதேவியிடம் ஒப்படைத்தார்.
அப்போது அந்த சூட்கேஸ்சில் ஸ்ரீதேவியின் 40 பவுன் தங்க நகை இருந்தது தெரிந்தது. சூட்கேஸை பெற்றுக்கொண்ட ஸ்ரீதேவி லுாப்னாவிற்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தார்.