திருப்பத்துார்:விபத்தில் காயமடைந்த லாரி டிரைவருக்கு தலையில் சிக்கிய இரும்பு 'நட்'டை அகற்றாமல் நர்ஸ் தையல் போட்டது சர்ச்சையானது.
திருப்பத்துார் மாவட்டம் மின்னுாரைச் சேர்ந்த லாரி டிரைவர் கார்த்திகேயன், 45, நேற்று முன்தினம் காலை, லாரியில் சரக்குடன் ஆம்பூரிலிருந்து வேலுார் சென்றார்.
அகரம்சேரி அருகே பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில் லாரி கவிழ்ந்தது. விபத்தில் காயமடைந்த கார்த்திகேயன், வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தலை மற்றும் தாடையில் நர்சுகள் தையல் போட்டனர். இருப்பினும் வலி ஏற்பட்டதால் உறவினர்கள் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, அவரை அரியூர் நாராயணி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எக்ஸ் - ரே, ஸ்கேன் எடுத்ததில் விபத்தின் போது, தலையில் சிக்கிய நட்டை அகற்றாமல் கார்த்திகேயனுக்கு தையல் போட்டது தெரிந்தது. அவரது தலையில் சிக்கிய நட்டு அகற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரது உறவினர்கள், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை டாக்டரிடம் கேட்டபோது அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் பாப்பாத்தி கூறுகையில் ''குற்றம் நிரூபணமாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.