பல்லடம்;'டம்மி' துப்பாக்கியை காட்டி மிரட்டிய கோவையை சேர்ந்த இன்ஜினியர்கள் இருவரை, பல்லடம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், கோரப்பள்ளத்தை சேர்ந்த ஸ்டீபன் மகன் கென்சன்ராஜ், 38. அப்பகுதியிலுள்ள உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் டிரைவர். பேப்பர் லோடுடன் மேட்டுப்பாளையம் செல்ல, நேற்று அதிகாலை பல்லடம் நோக்கி வந்தார்.
அப்போது, தாராபுரம் ரோட்டில், காரில் சென்ற இருவர், முகப்பு விளக்கை குறைக்கவில்லை என்று கூறி, லாரியை வழிமறித்து தகராறு செய்தனர். திடீரென ஒருவர், துப்பாக்கியை காட்டி கென்சன்ராஜை மிரட்டினார். இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார், அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.
டிரைவரிடம் தகராறு செய்த இருவரிடமும் விசாரித்தனர். அதில், இருவரும் கோவை, துடியலுாரை சேர்ந்த செந்தில்நாதன் மகன் அபிஷேக் குமார், 22 மற்றும் கோவை, நல்லாம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் மகன் பரணீதரன், 22 என்பதும், கோவையில் இன்ஜினியர் என்பதும் தெரிந்தது.
தொடர் விசாரணையில், டிரைவரை மிரட்டியது 'டம்மி' துப்பாக்கி என்பதும் தெரிந்தது. புகாரின் பேரில், இருவரையும் கைது செய்த போலீசார், ஜே.எம்.,கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், பல்லடம் கிளை சிறையில் அடைத்தனர்.