பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, ஆழியாறு பழைய ஆயக்கட்டு தடுப்பணைகள், 12 கோடி ரூபாய் செலவில், சீரமைக்கும் பணிகள் நடக்கிறது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு மற்றும் கேரளா மாநில பாசனத்துக்கு நீர் வினியோகிக்கப்படுகிறது. இதுதவிர, குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதில், பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு உட்பட்ட, காரப்பட்டி, அரியாபுரம், பள்ளிவளங்கால், வடக்கலுார், பெரியணை மற்றும் அம்மன் கால்வாய் வழியாக நீர் வினியோகிக்கப்படுகிறது.
ஆழியாறு ஆறு வாயிலாக, இந்த பாசனத்திற்கு வழங்கப்படும் நீரினை பயன்படுத்தி, 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மண் கால்வாய்கள் வழியாக நீரினை பயன்படுத்தி, நெற்பயிர் சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, உலக வங்கி நிதி உதவியுடன் தடுப்பணைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'உலக வங்கி நிதியுதவியுடன், தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில், நீர்வள, நிலவளத் திட்டத்தின் கீழ், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பழைய ஆயக்கட்டுக்கு உட்பட்ட ஐந்து கால்வாய்களின் தடுப்பணைகள் புனரமைப்பு மற்றும் குளப்பத்துக்குளம் மதகு சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன' என்றனர்.
கண்காணிப்பு தேவை
விவசாயிகள் கூறுகையில், 'பல ஆண்டுகள் பலன் அளிக்கும் வகையில் தடுப்பணைகளில், தரமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். இதனை, நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு செய்ய வேண்டும்,' என்றனர்.