பராமரிபோ: சுரினாம் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டு உள்ளது.
தென் அமெரிக்க நாடான சுரினாமுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, முதன் முறையாக, மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார். சிறப்பு விமானம் வாயிலாக, கடந்த 4ம் தேதி, சுரினாம் தலைநகர் பராமரிபோவுக்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவை, அந்நாட்டு அதிபர் சந்திரிகாபெர்சாத் சந்தோகி வரவேற்றார்.
இந்நிலையில், பராமரிபோவில் உள்ள அதிபர் மாளிகையில், நேற்று நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, சுரினாம் நாட்டின், 'கிராண்டு ஆர்டர் ஆப் தி செயின் ஆப் தி யெல்லோ ஸ்டார்' என்ற உயரிய விருதை, அந்நாட்டின் அதிபர் சந்திரிகாபெர்சாத் சந்தோகி வழங்கி கவுரவித்தார்.
இந்த விருதை, சுரினாமில் வசிக்கும் இந்திய-ர்களுக்கு அர்ப்பணிப்பதாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார். விருது பெற்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக, சுரினாமுக்கு இந்தியர்கள் வந்து, 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், ''கடந்த 150 ஆண்டுகளில், இந்திய சமூகத்தினர் சுரினாமில் முக்கிய அங்கம் வகிப்பதோடு, இந்தியா - சுரினாம் இடையேயான ஆழ்ந்த கூட்டணியின் துாணாகவும் விளங்குகின்றனர்,'' என, குறிப்பிட்டார்.