கடலுார் : கடலுாரில் நடந்த சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் மூன்று அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு தலைமை தாங்கினார். அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன், நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், கலெக்டர் அருண் தம்புராஜ், எஸ்.பி., ராஜாராம், டி.ஆர்.ஓ., ராஜசேகரன் முன்னிலை வகித்தனர். இதில், கடலுார் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பாக நெடுஞ்சாலை துறை, பள்ளிக்கல்வித்துறை, வட்டார போக்குவரத்து துறை, காவல் துறை, மக்கள் நல்வாழ்வு துறை ஆகிய 5 துறைகள் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, சாலை பாதுகாப்பில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனத்திற்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், 269 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 362 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வேலு, பன்னீர்செல்வம், கணேசன் வழங்கினர்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன், சிந்தனைச்செல்வன், ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தலைமை பொறியாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.