அரசியல் கட்சி கூட்டங்கள், தனிப்பட்ட சுப நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் துவங்கி பிறந்த நாள் முதல் நினைவஞ்சலி வரையில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கும் கலாசாரம் அதிகரித்துள்ளது.
கடந்த காலங்களில் ஓவியர்கள் சுவர் விளம்பரங்கள் எழுதுவார்கள். அதனால் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாளடைவில் டிஜிட்டல் பேனர்கள் வந்ததால் நமது விருப்பப்படி குறைந்த நேரத்தில் பேனர்கள் ரெடி செய்துவிடலாம். ஏராளமான புகைப்படங்கள், நினைத்த வாசகங்கள் இடம் பெற செய்ய முடிகிறது. அதேபோல், எவ்வளவு பெரிய அளவிலும் பேனர் தயார் செய்ய முடிகிறது.
இதனால் தமிழகம் முழுவதும் பேனர் கலாசாரம் அதிகரிக்க துவங்கியுள்ளது. பல இடங்களில் பெரிய அளவில் வைக்கப்படும் பேனர்கள் காற்றில் சரிந்து விழுந்து உயிரிழப்புகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. கோர்ட் கண்டித்தும், பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.
அந்த வகையில், கடலுார் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம் பகுதியில் பேனர் கலாசாரம் உச்சத்தில் இருந்தது. முக்கிய சாலைகளில் பேனர்கள் வைப்பதால் வியாபாரம் பாதிப்பதாக வியாபாரிகள் கொதித்தெழுந்தனர். அது பிரச்னையாக உருவெடுத்ததால், கடந்த ஓராண்டாக்கு மேலாக பேனர்கள் வைக்கப்படாமல் இருந்தது.
ஆனால், கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சி பிரமுகர்களின் இல்ல திருமணங்களுக்கு ஊரெங்கும் பேனர்கள் வைத்தனர். அதை தொடர்ந்து டிஜிட்டல் பேனர்கள் வைப்பது மீண்டும் அதிகரித்துள்ளது.
பேனர் வைக்க, நகராட்சி மற்றும் போலீசாரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை யாரும் பின்பற்றுவதில்லை.
கடைகளை மறைத்து பேனர்கள் வைப்பதால் வியாபாரம் பாதிப்பதாக வியாபாரிகள் போலீசில் புகார் கூறினர்.
ஆனாலும், போலீசார் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருப்பதால் மீண்டும் டிஜிட்டல் பேனர் கலாசாரம் உச்சத்திற்கு சென்றுள்ளது.
சமீபத்தில் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையம் வந்த எஸ்.பி.ராஜாராம், சாலையோர பேனர்களை பார்த்து கடும் எரிச்சலானார். உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். மறுநாள் காலை போலீசார் பேனர்களை அகற்றினர். ஆனால் அன்று இரவே மீண்டும் பேனர்கள் வைக்கப்பட்டது. அதுபற்றி போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதைய நிலையில், நகரத்தில் எங்கு பார்த்தாலும் பேனர் மயமாக காட்சியளிக்கிறது.
கோவையில் பேனர் வைக்கும் போது ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். அதுபோன்ற நிகழ்வு ஏதும் நெல்லிக்குப்பம் பகுதியில் நிகழ்ந்துவிடாமல் தடுக்க, எஸ்.பி.ராஜாராம் அதிரடி நடவடிக்கை எடுத்து, பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.