நெய்வேலி : என்.எல்.சி.,யில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பசுமைப் பயணம் எனும் களப் பார்வையிடல் பயணத்தை சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நெய்வேலி ஆர்ச் கேட்டில் இருந்து பள்ளி மாணவ-, மாணவியர் மூன்று பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். நெய்வேலி அருகே தெற்கு சேப்பளாநத்தம் கிராமத்தில் நெல், கரும்பு, மணிலா வயல்கள், முந்திரி மற்றும் தென்னந்தோப்புகளை மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். பின்னர், தெற்கு சேப்ளாநத்தம், காமராஜ் நகரில் உள்ள, கொளஞ்சியப்பர் நவீன அரிசி ஆலைக்கு சென்று, அதன் செயல்பாட்டை கேட்டறிந்தனர்.
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பேராசிரியர் துரைசாமி சுற்றுச்சூழல் குறித்து விளக்கி பேசினார்.
என்.எல்.சி., நிறுவனம் சார்பில் செயல்பட்டு வரும் ஆதரவற்ற முதியோர்கள் வசிக்கும் ஆனந்தம் இல்லத்திற்கு வருகை தந்த சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி அங்கிருந்தவர்களிடம் கலந்துரையாடினார். மேலும், ஆனந்தம் இல்லத்தின் பராமரிப்பு, முதியவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ வசதிகள் குறித்து அதிகாரிகளை கேட்டறிந்தார். இல்ல வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
என்.எல்.சி., சுற்றுச்சூழல் துறை செயல் இயக்குநர் ராணி அல்லி மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.