மேலூர்: மதுரை மாவட்டம் மேலுார் அருகே கிடாரிப்பட்டியில் உறவினரை மதுவில் விஷம் கொடுத்து கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கிடாரிப்பட்டி பனையன் 45, பெரியநாச்சியம்மன் கோயில் பூஜாரி. இக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக பெயின்ட் அடிக்கும் பணியில் உப்போடைப்பட்டி பனையன், வீரணன் 42, கிடாரிப்பட்டி கருவா மொண்டி 43, வேலை பார்த்தனர். ஜூன் 2 ல் வீரணன் வாங்கி வந்த மதுவை மூவரும் குடித்தனர். கருவாமொண்டி, வீரணன் இருவரும் வீட்டிற்கு சென்றனர். சற்று நேரத்தில் மது அருந்திய இடத்தில் பனையனும் வீட்டில் கருவாமொண்டியும் மயக்கமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பனையன் இறந்தார். கருவாமொண்டி சிகிச்சை பெற்று வருகிறார்.
பனையன் மனைவி கருத்தழகி மேலவளவு போலீசில் புகார் அளித்தார். மேலவளவு போலீசார் விசாரித்தனர். இதில் வீரணன் மதுவில் பூச்சி கொல்லி மருந்து கலந்திருந்தது தெரியவந்தது. வீரணனிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் மதுவில் விஷம் கலந்ததை ஒப்புக்கொண்டார்.
கொலை குறித்து போலீசார் கூறியதாவது: மது குடித்த மூவரில் வீரணனுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கருவாமொண்டியிடம் விசாரித்த போது மதுவை வாங்கி வந்து வீரணன் கலந்து கொடுத்தாக கூறினார். ஆனால் வீரணன் தான் மது வாங்கி மட்டும் கொடுத்ததாக கூறினார். சந்தேகம் ஏற்படவே தீவிரமாக விசாரித்தோம்.
பத்து நாட்களுக்கு முன் வீரணன் அம்மா இறந்தார். கிடாரிப்பட்டி கோயில் கும்பாபி ஷேகத்திற்கு காப்பு கட்டியதால் துக்க நிகழ்ச்சியில் பூஜாரி பனையன் மற்றும் அவரது உறவினர்கள் கலந்து கொள்ளவில்லை. அம்மா இறப்பில் பனையன் கலந்து கொள்ளாததோடு சீரும் கொண்டு வரவில்லை என்பதால் ஆத்திரமடைந்த வீரணன் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர்.