சென்னை: தென் கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப் பெற்றுள்ளது. இந்த புயலுக்கு, 'பைபோர்ஜாய்' என, பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென் கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று காலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றது. இது, மேலும் வலுப்பெற்று, அரபிக் கடலின் தென்கிழக்கு பகுதியில், நேற்றிரவு புயலாக மாறியது.
இதனால் அரபிக் கடல் பகுதியில், கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. மணிக்கு, 100 கி.மீ., முதல், 150 கி.மீ., வேகம் வரை சூறாவளிக் காற்று வீசுகிறது. இன்றும், நாளையும், கேரள, கர்நாடக கடற்பகுதி; வரும் 9ம் தேதி வரை கர்நாடக கடற்பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், வெப்பச் சலனம் காரணமாக, இன்று முதல், 10ம் தேதி வரை மிதமான மழை பெய்யும்.
தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இன்று அதிகபட்சம், 41 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்ப நிலை பதிவாகும். இயல்பில் இருந்து, 4 டிகிரி செல்ஷியஸ் வரை, வெப்ப நிலை அதிகரிக்கும்.
நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, வேலுார், சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், திருத்தணியில், 42 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது. இது, 108 டிகிரி பாரன்ஹீட்.
கரூர் பரமத்தி, 40; மதுரை, ஈரோடு, சேலம், திருப்பத்துார், புதுச்சேரி, 39; கடலுார், தர்மபுரி, பாளையங்கோட்டை, 38 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்ப நிலை பதிவானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரபிக் கடலில் உருவாகியுள்ள புயல், நாளை தீவிர புயலாகவும், அதன்பின், 9ம் தேதி மிக தீவிர புயலாகவும் வலுப்பெறும் என, கணிக்கப்பட்டுள்ளது.
புயல் வடகிழக்காக நகர்ந்து, பாகிஸ்தான் எல்லைக்கும், குஜராத்துக்கும் இடையில், வரும், 14ம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு, வங்க தேசம் வழங்கியுள்ள 'பைபோர்ஜாய்' என்ற பெயர் சூட்டப்பட்டு உள்ளது.