கோ. சுரேஷ்
கட்டுரையாளர், திருப்பூர், வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில முதுகலை ஆசிரியர். திருப்பூர் மாவட்ட ‛நீட்', ஜே.இ.இ., மற்றும் ஐ.ஐ.டி., தேர்வு ஒருங்கிணைப்பாளர்; உயர்படிப்பு மற்றும் போட்டி தேர்வுக்கான ஆலோசகர்; பள்ளி கல்விதுறையின் ‛கனவு ஆசிரியர்', விருது, ‛தினமலர்' நாளிதழின் லட்சிய ஆசிரியர் விருது, மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்.
'இன்றைய சூழலில் வேலைவாய்ப்பு தரும் கல்வியை, தங்கள் குழந்தைகள் கற்றுத்தேற வேண்டும்' என்ற ஆவல் பெற்றோரிடம் மேலோங்கியிருக்கிறது. அனைத்து தரப்பு பெற்றோர் மத்தியிலும், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கனவு, நிறையவே இருக்கிறது. கல்விக்கு செலவிடும் தொகையை முதலீடாக பார்க்க துவங்கியிருக்கின்றனர்.
அதே நேரம், அரசுப்பள்ளிகளில் பயின்றாலும், தங்கள் பிள்ளைகள் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்ற எண்ணமும் மேலோங்கி இருக்கிறது; அதற்கேற்ப மாணவர்களும், பல்வேறு துறைகளில் ஜொலிக்கின்றனர். திருப்பூர் போன்ற இடம்பெயர்ந்து வருவோர் அதிகமுள்ள மாவட்டங்களில், உயர்கல்வி பயில்வோரின் சதவீதம் அதிகரிக்க வேண்டும்; கல்வி குறித்த விழிப்புணர்வு, இன்னும் அதிகளவில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அரசுப்பள்ளிகளில், தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோர் மத்தியில் கூட போட்டித்தேர்வு மூலம், மத்திய, மாநில அரசு பணிகளை, தங்கள் பிள்ளைகளால் பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. போட்டி நிறைந்த சமுதாயத்தில், கற்கும் கல்விக்கேற்ப வேலை வாய்ப்பு கிடைப்பது கடினம் என்பதால், 'தன் பிள்ளை, எதிர்காலத்தில், எந்த மாதிரியான வேலையைப் பெற வேண்டும்' என்பதை ஆரம்பக்கல்வியிலேயே தீர்மானிக்க வேண்டும். பள்ளியில் படிக்கும் போதே, பிள்ளைகளை போட்டி தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்.
மத்திய, மாநில அரசு பணி சார்ந்த தேர்வுகள் குறித்து, அவர்களை அறிந்துகொள்ள செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுப்பணிகள் என்னென்ன; அதற்கு எப்போது தேர்வு நடத்தப்படுகிறது; எப்போது விண்ணப்பிக்க வேண்டும் என்பது போன்ற தெளிவை முதலில் பெற வேண்டும். இதன் வாயிலாக, 'நமக்கெல்லாம் அரசுப்பணி கிடைக்காது' என்ற தாழ்வு மனப்பான்மையில் இருந்து மாணவர்களை வெளிக்கொணர முடியும்.
தற்போதைய சூழலில் அனைத்து வேலை, பதவிகளுக்கும் போட்டி அதிகரித்துக்கொண்டே வருகிறது; அதற்குரிய தகுதியை, கல்லுாரிக்குள் நுழையும் போதே மாணவர்கள் வளர்த்துக் கொண்டால், கல்லுாரி படிப்பு முடித்தவுடன், வேலைவாய்ப்பு என்பது எளிதாகும்.
ஏட்டுக்கல்வி மட்டும் போதாது
மற்ற மாணவர்களை பின்பற்றி, உயர்கல்வியை தேர்ந்தெடுக்கும் மனநிலையை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். உதாரணமாக, பி.காம்., பாடத்தில், வேலை வாய்ப்பு உறுதிப்படுத்தும் பல்வேறு உட்பிரிவு பாடங்கள் உள்ளன. உடன்படித்த மாணவர்கள் பி.காம்., தேர்வு செய்கிறார்கள் என்பதற்காக, மற்றவர்களும் அதையே தேர்வு செய்யக்கூடாது.
அவ்வாறு தேர்வு செய்யும் போது, படிப்பில் மட்டுமல்ல, வேலையிலும் போட்டி அதிகரிக்கும். முயற்சி செய்யும் பணி கிடைக்காவிட்டால், வேறொரு பணி கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை யுடன் இருக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களும், பாடம் சார்ந்த கல்வியுடன், பாடம் சாராத கல்வியையும் போதிக்க வேண்டும். சுருக்கமாக சொல்லப்போனால், தற்போதைய சூழலில், ஏட்டுக்கல்வி தரும் அறிவை தாண்டிய திறமையை தான் சமுதாயம் எதிர்பார்க்கிறது. வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர்கள், தான் படித்த கல்வியை தாண்டி, வேறென்ன தகுதி வைத்திருக்கிறார் என்பதைதான், வேலை வழங்கும் நிறுவனங்களும் உற்று கவனிக்கின்றன.
மொழி அறிவு முக்கியம்
தமிழ் கட்டாயம் என்றாலும் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி புலமையும் அவசியம். அப்போது தான் மத்திய, மாநில அரசுகள் சார்பில் நடத்தப்படும் போட்டி தேர்வு மட்டுமின்றி, ஐ.டி., துறை உள்ளிட்ட தனியார் வேலைவாய்ப்புகளை எளிதாக அணுக முடியும். கேட்பது, பேசுவது, எழுதுவது, வாசிப்பது என்ற நான்கு பண்புகளை வளர்த்துக் கொள்வது அவசியம். அத்துடன், தொடர்பு(கம்யூனிகேஷன்) திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள், ஆறாம் வகுப்பில் இருந்தே, பள்ளி, மாவட்ட மற்றும் மாநில அளவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்; சான்றிதழ் வாங்க வேண்டும். இதன் வாயிலாக, விளையாட்டு ஒதுக்கீடு அடிப்படையில், வேலை வாய்ப்பு பெறுவது எளிதாகும்.
எல்லை கடந்த பார்வை
தனியார் கல்லுாரிகள் போன்று, அரசு கல்லுாரிகளிலும் திறன் வளர்ப்பு, வேலை வாய்ப்புக்கான மையங்களை நடத்தினால், நல்ல பலன் கிடைக்கும். தமிழக அரசின், 'நான் முதல்வன்' திட்டத்தின் வாயிலாக, வேலை வாய்ப்புக்கேற்ற உயர்கல்வி தேர்வு குறித்த தெளிவை பெறுவது எளிதாகியுள்ளது. மாவட்டந்தோறும், வேலை வாய்ப்பு அலுவலகம் அல்லது தனியாக, போட்டி தேர்வுக்கு வழிகாட்டும் மையங்கள், 'அறிவு மையம்' என்ற பெயரில் அமைத்து செயல்படுத்தினால், மாணவர்களுக்கான வாய்ப்பு கைகூடும். 'தமிழகத்திற்குள்ளேயே வேலை கிடைக்க வேண்டும்' என்ற மனநிலையை பெற்றோர் கைவிட வேண்டும்; எங்கு சென்றும் பணியாற்றும் ஊக்குவிப்பை பிள்ளைகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.
முன்பெல்லாம், 12ம் வகுப்பு முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக காத்திருக்கும் மனநிலையில் பலரும் இருந்தனர். இன்றைய சூழலில், வாரிசு வேலை, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் என குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு அலுவலகம் வாயிலாக வேலை கிடைக்கிறது. மாறாக, டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி., போன்ற போட்டித்தேர்வு வாயிலாக தான் பெரும்பாலான அரசுப்பணிகள் நிரப்பப்படுகின்றன.
தனியார்மயக் கொள்கையால், அரசுப்பணியே இருக்காது என்ற ஒரு பேச்சும் பரவலாக உள்ளது; இது தவறு. அரசுப்பணி மீது ஆர்வம் உள்ளவர்கள், அரசு வேலையை பெற தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதேநேரம், அரசு சம்பளத்தை விட, தனியார் நிறுவனங்கள், குறிப்பாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகளவு சம்பளம் தருவதால், ஐ.டி., துறை உள்ளிட்ட தனியார் துறைகளை இளைஞர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கின்றனர்.
தன்னம்பிக்கை அவசியம்
இன்றைய சூழலில், மொபைல் போன்களின் ஆதிக்கம், அதிக நேரத்தை தேவையின்றி செலவழிக்க வைக்கிறது.
தேவைக்கு மட்டும், மொபைல் போன் பயன்படுத்தும் பழக்கத்தை மாணவ, மாணவியர் ஏற்படுத்திக் கொண்டால், நல்ல விஷயங்களை கற்று, அதை தங்களின் கல்வி, வேலையில் பயன்படுத்தும் போது, மிகுந்த பயன்தரும். கூட்டுக்குடும்ப வாழ்க்கை சிதைந்து தனிக்குடும்ப வாழ்க்கையில், பிள்ளைகள் அதிகம் தனிமையை உணர்கின்றனர்.
யாருடனும் கலந்து பேசும் வாய்ப்பு இல்லாமல் போவதால், தோல்வியை தாங்கிக் கொள்ளும் சக்தி அவர்களிடம் இல்லை; பெற்றோர் திட்டினாலே, தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் தான் பிள்ளைகள் உள்ளனர். எனவே, பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை அதிகளவில் ஏற்படுத்த வேண்டும். தோல்வியை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியர், துவண்டுவிடக்கூடாது; வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் வெற்றிக்கதைகள், இவர்களுக்கு ஊக்கமளிக்கும்.