சென்னை: ''சென்னையில் அரசு பணிகளில் ஏற்படும் காலதாமதங்களை தவிர்க்கும் வகையில், 12 அரசு துறைகளை ஒருங்கிணைத்து, மாநகராட்சி வட்டார துணை கமிஷனர் தலைமையில், ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது,'' என, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
இதன் வாயிலாக, இனி புதிதாக சாலை போட்ட பின், 'மேன் ஹோலுக்காக' நோண்டுவதும், மழைநீர் வடிகால் அமைக்க, புதை மின்வடம் பதிக்க தோண்டுவதும், இனி தவிர்க்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில், குடிநீர் வழங்கல், மாநகராட்சி நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, மின் வாரியம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உள்ளிட்ட பல்வேறு துறைகள், சேவை பணிகளை வழங்குகின்றன.
குறிப்பாக சாலை, மழைநீர் வடிகால், மேம்பாலம், பாலம், புதைமின்வடம், குடிநீர் குழாய் அமைத்தல், மெட்ரோ ரயில் சுரங்கப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
இதில், அரசு துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், பல்வேறு பணிகள் குறிப்பிட்ட நேரத்தில் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சாலை, மழைநீர் வடிகால், மெட்ரோ ரயில் பணி உள்ளிட்டவற்றிற்கு போக்குவரத்து போலீசாரின் அனுமதி, இதர துறைகளின் அனுமதி மற்றும் ஒத்துழைப்பு இல்லாததால், அவை விரைந்து மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது.
மாநகராட்சி புதிதாக சாலை அமைக்கிறது. அங்கு குடிநீர் வாரியம் மற்றும் மின்சார வாரியத்தினர், சாலை வெட்டு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
சாலை அமைக்கும்போது, பாதாள சாக்கடை 'மேன்ஹோல்' மூடியை மறைத்து சாலை அமைக்கின்றனர். பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டபின், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தினர், 'மேன்ஹோல்' பகுதியில் பள்ளம் தோண்டுவர்.
இதனால், பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக, மேடும் பள்ளமுமாக காட்சியளிக்கின்றன.
இதுபோன்ற பல்வேறு குறைபாடுகளை தவிர்க்கும் வகையில், சென்னை மாநகராட்சி தொடர்புடைய சேவைத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை குடிநீர் வழங்கல், நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 12 அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
சென்னையில் பல்வேறு சேவை நிறுவனங்கள் சார்பில், சாலை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு துறைகளிடம் ஒருங்கிணைப்பு இல்லாததால், சில பணிகளில் தாமதம், மக்களிடையே அதிருப்தி போன்றவை நிலவுகிறது.
எனவே, வளர்ச்சி மற்றும் திட்டப்பணிகள் தொய்வில்லாமல் விரைவில் முடிக்கவும், ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்காக, மாநகராட்சி வட்டார துணை கமிஷனர் தலைமையில், 12 அரசு துறைகளை ஒருங்கிணைத்து குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் அனைத்து பணிகளையும் விரைந்து மேற்கொள்வதுடன், ஒரு துறையின் பணிகள் முழுமையாக முடித்த பின், உடனடியாக அடுத்த துறை பணிகளை மேற்கொள்ள உதவும்.
உதாரணமாக, குடிநீர் அல்லது மின் வாரியம் ஒரு பணியை துவக்கி முடித்த பிறகே, சாலை பணியை மாநகராட்சி மேற்கொள்ளும். அப்போது, மற்ற துறைகளுக்கு உள்ள இடர்பாடுகள் தவிர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.