தர்மபுரி: தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் உள்ள பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஆராய்ச்சி மைய நாட்டு நலப்பணித்திட்டம், இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் சார்பாக, உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) மோகனசுந்தரம் தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்ட கோட்ட வன அலுவலர் சக்திவேல், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய, தர்மபுரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நித்திய லட்சுமி ஆகியோர், இன்றைய கால சூழலில் நம் வாழ்க்கை முறையில் ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய சிறு சிறு மாற்றங்கள், எவ்வாறு சுற்றுச்சூழலில் மிகப்பெரும் நேர்மறையான மாற்றங்களை உண்டாக்கும் என்பது குறித்து பேசினர்.
சேலம், பெரியார் பல்கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியை ஜனகம் பருவகால சூழலுக்கு ஏற்றால் போல, நாம் எவ்வாறு இயற்கையோடு இணைந்து பயணிக்க வேண்டும் என்பதையும், மின்னணு சாதன கழிவுகள் மற்றும் ஏனைய பிற கழிவுகளை எவ்வாறு மறுசுழற்சியின் மூலம் பயன்படுத்தி, நம்மையும் நம் வாழும் பூமியையும் பாதுகாக்கலாம் என்பது குறித்தும் பேசினார். தொடர்ந்து, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவியம், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவவர்களுக்கு, பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத துணிப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக துணிப்பையும் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கையேடு மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. கள விளம்பர அலுவலர் பிபின் எஸ்.நாத் உட்பட, பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் கோவிந்தராஜ், முனைவர்கள் காமராஜ், சஞ்சய் காந்தி பெருமாள், ஹரி கிருஷ்ணன், தாமரைச்செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.