இன்ஸ்பெக்டருக்கு
'பிடிவாரன்ட்'
சேந்தமங்கலம் நீதிமன்றத்தில், விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு, 'பிடிவாரன்ட்' பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எருமப்பட்டி அருகே, 2014ல் ஏற்பட்ட மோதல் வழக்கில், அப்போதைய எருமப்பட்டி எஸ்.ஐ., மாதையன் விசாரணை அதிகாரியாக இருந்தார். இந்த வழக்கு சேந்தமங்கலம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சியமளிக்க, மாதையன் ஆஜராகவில்லை. எஸ்.ஐ., மாதையன் தற்போது கோவை மாவட்டத்தில், இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார். தொடர்ந்து, வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர் மாதையனுக்கு, சேந்தமங்கலம் நீதிமன்ற நீதிபதி, 'பிடிவாரன்ட்' பிறப்பித்து உத்தரவிட்டார்.
இதேபோல், கடந்த வாரம் நடந்த ஒரு வழக்கில், இன்ஸ்பெக்டர் மாதையன் ஆஜராகாததால், 'பிடிவாரன்ட்' பிறப்பித்திருந்த நிலையில், தற்போது மீண்டும், 'பிடிவாரன்ட்' பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாய்க்காலில் சாய்ந்த மரம்
அகற்ற மக்கள் கோரிக்கை
ஆலாம்பாளையம் பகுதியில் செல்லும் கிளை வாய்க்காலில், சாய்ந்துள்ள மரத்தை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிபாளையம் அருகே, ஆலாம்பாளையம் பகுதியில் மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலின் கிளை வாயக்கால் செல்கிறது. பாசனத்திற்கு தண்ணீரும் வரும்போது, இந்த கிளை வாய்க்கால் வழியாக தான் வயல்வெளியின் கடைமடை வரை செல்லும். இந்த கிளை வாய்க்காலில் கடந்த மாதம் ஒரு பெரியமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் வாய்க்கால் கரையும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் பாசனத்திற்கு வாய்க்காலில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.
எனவே, நீர்வளத்துறை அதிகாரிகள், வாய்க்காலில் சாய்ந்துள்ள மரத்தை அகற்றிவிட்டு, வாய்க்காலை பராமரிப்பு செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போலீஸ் ஸ்டேஷனில் சுற்றுச்சூழல் தினவிழா
எலச்சிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில், உலக சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாடப்பட்டது.
உலக சுற்றுச்சூழல் தின விழா, எலச்சிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ., ராமச்சந்திரன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில், சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருக்கும் வேண்டும் என, அறிவுறுத்தும் பொருட்டு மரக்
கன்றுகள் நடப்பட்டன.
ரூ.76 ஆயிரத்துக்கு
தேங்காய் விற்பனை
ப.வேலுாரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. இதில் சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், 13 ஆயிரம் தேங்காய்களை ஏலத்துக்கு கொண்டுவந்தனர். அதிகபட்சமாக தேங்காய் கிலோ, 21.75 ரூபாய்க்கும், குறைந்தபட்சம், 15.05 ரூபாய்க்கும், சராசரியாக, 19.69 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 76 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகமானது.
தமிழ் புலிகள் கட்சியின்
மாநில செயற்குழு கூட்டம்
நாமக்கல்லில் தமிழ் புலிகள் கட்சி சார்பில், மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் திருவள்ளுவன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், தமிழகரசின் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லுாரி, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதன் அரசு மருத்துவ கல்லுாரிகளின் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவக்கல்வி வாரியம் திட்டமிட்டு ரத்து செய்திருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது நடப்பு கல்வியாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை பாதிக்காத வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தனியார் வங்கி மேலாளர்
நாமக்கல்லில் தற்கொலை
ஆந்திரா மாநிலம், நெல்லுாரை சேர்ந்த சிவகிரி மகன், சிவகிரிகிரண், 24; இவர், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஹெச்.டி.எப்.சி., தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த, 4ல், நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று காலை, நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால், சந்தேகமடைந்த லாட்ஜ் பணியாளர்கள், ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர்.
அப்போது, சிவகிரிகிரண், அறையில் உள்ள பேனில் துாக்கிட்டு சடலமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். நாமக்கல் போலீசார், லாட்ஜில் அறை கதவை உடைத்து, சிவகிரிகிரண் உடலை மீட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது விற்ற மூவர் கைது
குமாரபாளையம் பகுதியில் கூடுதல் விலைக்கு, மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். ஓலப்பாளையம் பகுதியில் அரசு பள்ளி அருகே மது விற்றுக்கொண்டிருந்த ரவிச்சந்திரன், 43, என்பவரை கைது செய்தனர். இதேபோல், தாபா ஓட்டலில் மதுவிற்ற கதிர்வேல், 45, கைது செய்யப்பட்டார். சாணார்பாளையம் பெட்டிக்கடையில் மது விற்ற, எடப்பாடியை சேர்ந்த சதீஸ்ராகவனை, 29, கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.
முள்ளுக்குறிச்சி அருகே
பஸ் டிரைவர் கொலை
நாமகிரிப்பேட்டை அடுத்த, முள்ளுக்குறிச்சி ஊராட்சி கரியாம்பட்டி முருகன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்; இவரது மகன் மோகன்ராஜ், 33; தனியார் பஸ் டிரைவர்.
நேற்று மதியம், மோகன்ராஜை சந்திக்க, மூலப்பள்ளிப்பட்டியிலிருந்து அவரது நண்பர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது, வீட்டின் அருகே மோகன்ராஜ் வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஆயில்பட்டி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று நடத்திய விசாரணையில், மோகன்ராஜ் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த அடையாளம் தெரியாத டூவீலரில், 80 ஆயிரம் ரூபாய், 3 பவுன் தங்க செயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டி.எஸ்.பி., செந்தில்குமார் ஆய்வு செய்தார். இதுகுறித்து, தொடர்ந்து
விசாரித்து வருகின்றனர்.
சாலை டிவைடரில் ஒளிரும்
விளக்கு பொருத்தப்படுமா?
குமாரபாளையத்தில், சாலை நடுவே வைக்கப்பட்டுள்ள டிவைடரில் ஒளிரும் விளக்குகள் பொருத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம்-சேலம் சாலையில், போலீஸ் ஸ்டேஷன் முதல் கத்தேரி பிரிவு சாலை வரை, 2 கி.மீ., துாரத்திற்கு சாலை நடுவே டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளன. போலீஸ் ஸ்டேஷன், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர் பிரிவு, குளத்துக்காடு பாலம், பவர் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் உள்ள டிவைடர்களின் முகப்பில் ஒளிரும் விளக்குகள் இல்லாததால், இரவில் வரும் வாகனங்கள் இந்த டிவைடர் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். பெரிய அளவில் விபத்து நடக்கும் முன், சாலை நடுவே உள்ள டிவைடர்களில், ஒளிரும் விளக்குகள் பொருத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிபாளையம் அருகே
துாக்கிட்ட வாலிபர் சாவு
பள்ளிபாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த விட்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார், 23; செல்போன் சர்வீஸ் சென்டர் நடத்தி வந்தார். இவரது மனைவி சம்யுக்தா, 20; இருவருக்கும் திருமணமாகி, ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.
கடந்த, 31ல், சதீஸ்குமார் துாக்குமாட்டி தற்கொலைக்கு முயன்றார். அவரது குடும்பத்தினர், சதீஸ்குமாரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த சதீஸ்குமார், நேற்று முன்தினம் இறந்தார். மொளசி போலீசார்
விசாரிக்கின்றனர்.