கடந்த 2021ல் வெளியான செய்தியை தவறாக சித்தரித்து, சமூக வலைதளத்தில் பதிவிட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்தவரை, திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த, 2021ல், திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், செம்பாக்கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக ஐந்து பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த செய்த, 2021 மே 28ம் தேதி நாளிதழ்களில் வெளியானது.
ஒரு நாளிதழில், வெளியான இச்செய்தியின் தலைப்பை மாற்றி, 'தி.மு.க.,வினர் கைது' என சமூக வலைதளங்களில் பதிவு வெளியானது. இது குறித்து, பல்லடம் நகர தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியம் என்பவர் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதனடிப்படையில், விசாரித்த 'சைபர்' கிரைம் போலீசார், செய்தியை மாற்றி பதிவிட்ட, காஞ்சிபுரம் மாவட்டம், பழவந்தாங்கல், பாரதியார் வீதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சரவணபிரசாத், 52 என்பவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட, சரவணபிரசாரத்தை, திருப்பூர் ஜே.எம்., கோர்ட் எண்: 3ல் போலீசார் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.