திருவொற்றியூர், திருவொற்றியூர் - எண்ணுார் விரைவு சாலை, கே.ஆர்.சுந்தரம் எஸ்டேட் பகுதியில், அருள் கொடுக்கும் ஆஞ்சநேய பெருமாள் கோவில் உள்ளது. 50 ஆண்டு பழமையான கோவிலில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று காலை மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
இதை முன்னிட்டு, 5ம் தேதி, கோ பூஜை, கணபதி ஹோமத்துடன் கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு, நவகிரஹ ஹோமம் உள்ளிட்டவை நடந்தன.
நேற்று முன்தினம் காலை, இரண்டாம் கால யாக சாலை பூஜை, நேற்று காலை, நான்காம் காலயாக சாலை பூஜை, நாடி சந்தானம், திரவ்ய ஹோமம், மஹா பூர்ணாஹூதி முடிவுற்று, கடம் புறப்படாகின. காலை 9:45 மணிக்கு, விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
அப்போது, கூடியிருந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள், 'ஜெய் ஆஞ்சநேயா' என, விண்ணதிர முழங்கினர். பின், பரிவார மூர்த்திகளுக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இக்கோவிலில் வழிபடுவதால், காரிய தடை, உடல் உபாதை, உத்யோகம், தொழில் முன்னேற்றம் நிவர்த்தியடையும் என்பது ஐதீகம் என, கோவில் நிர்வாகத்தினர் கூறினர்.