ஆவடி, இந்தாண்டில், ஒருவழியாக ஆவடி மாநகராட்சியின் இரண்டாவது மாமன்ற கூட்டம் நடந்தது. மே 25ம் தேதி நடக்க இருந்த கூட்டம், கவுன்சிலர்களுக்கு தெரியாமல் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு எழுந்த எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டது. அதே தீர்மானங்கள் நேற்று நினைவேற்றப்பட்டன.
ஆவடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம், நேற்று காலை 11:00 மணி அளவில், மேயர் ஜி.உதயகுமார் தலைமையில் நடந்தது. இந்தாண்டின் இரண்டாவது கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
நேற்று நடந்த கூட்டத்தில், மே 25ம் தேதி வழங்கப்பட்ட தீர்மானங்கள் தான் நிறைவேற்றப்பட்டன. அன்றைய கூட்டத்தின் போது, 'தீர்மானங்கள் எங்களுக்கு தெரியாமல் கொண்டு வந்ததாக கூறி, மண்டல குழு தலைவர் ராஜேந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் சிலர் கூட்டத்தை ரத்து செய்ய கோரினர். இதை தொடர்ந்தே அன்றைய கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஆனால், அதே தீர்மானங்கள் தான் நேற்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து, கூட்டம் மதியம் 12:05 மணி அளவில் முடிந்தது. நேற்று நடந்த கூட்டத்தில் மொத்தம் 140 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தீர்மானங்கள் குறித்து நடந்த விவாதங்களில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
ஜான், 10வது வார்டு மார்க்.கம்யூ., - கவுன்சிலர்:
இந்தாண்டு, ஒரே ஒரு கூட்டம் மட்டுமே நடந்துள்ளதால், வார்டு பிரச்னைகள் குறித்து விவாதிக்க முடியவில்லை. எங்கள் வார்டில், ஒரு குடிநீர் குழாய் கூட போடவில்லை. அதே போல், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., நிதி அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும்.
பிரகாஷ், 1வது வார்டு அ.தி.மு.க., - கவுன்சிலர்:
திடக்கழிவு மேலாண்மைக்கு, 1.30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்கான பணிகள் ஒன்றுமே நடக்கவில்லை. இந்த நிலையில், மீண்டும் 32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்து எந்த விரிவான தகவலும் தீர்மானத்தில் கூறாதது ஏமாற்றம் அளிக்கிறது.
ஜோதி லட்சுமி, 22வது வார்டு தி.மு.க., - கவுன்சிலர்:
கடந்த 35 ஆண்டுகளாக, எங்கள் வார்டில் எந்த வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை. பொதுமக்கள் முறையாக வரி செலுத்தும் போதும், சாலை மற்றும் சாக்கடை பிரச்னைக்கு எந்த தீர்வுமில்லை. அதே போல், மண்டலத்திற்கு ஒரு ஜே.சி.பி., வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்.
மதுரை ஆறுமுகம், 25வது வார்டு அ.தி.மு.க., - கவுன்சிலர்:
எங்கள் வார்டில் 80 சதவீதம் பேர் வரி கட்டியுள்ளனர். ஆனால் குடிப்பதற்கு ஒரு 'டம்ளர்' தண்ணீர் கூட இல்லை. குடிநீர் வழங்காமல், பொதுமக்களிடம் 1,800 ரூபாய் வரி வசூலிக்கப்படுகிறது. மாடு சாலையில் சாணமிட்டால்; அதை அள்ளும் போது, தார்ச்சாலையும் கையோடு வருகிறது. அந்த அளவிற்கு சாலையின் தரம் உள்ளது.
ரவி, 40வது வார்டு தி.மு.க., - கவுன்சிலர்:
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் கழிவுநீர் கால்வாய் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். கால்வாய் முழுதும் மண்ணால் மூடப்பட்டுள்ளது. 8 அடி கால்வாய், ஒரு அடி மட்டுமே துார் வரப்பட்டுள்ளது. அதை முழுதுமாக துார் வாரி, வடிகாலை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'தினமலர்' எதிரொலி
ஆவடி மாநகராட்சியில், மாதாந்திர கூட்டம் முறையாக நடக்கவில்லை என, மார்ச் 12ம் தேதி, நம் நாளிதழில் விரிவான செய்தி ஒன்று வெளியானது. அதன் எதிரொலியாக, மார்ச் 20ம் தேதி, மாமன்ற கூட்டம் நடந்தது. அதன் பின் கூட்டங்கள் நடக்கவில்லை.
இதைத்தொடர்ந்து, கடந்த மே மாதம் 3ம் தேதி, கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டு, மே 25ம் தேதி நடந்தது. மேயர் பரிந்துரையின்படி நடந்த இந்த கூட்டம், மேயரால் ரத்து செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து நம் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டது.
இதன் எதிரொலியாக, ஜூன் 3ம் தேதி, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, மாநகராட்சியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேயர் மீது குற்றச்சாட்டு
மேயர் உதயகுமார் மீது அடுக்கடுக்கான புகார்கள் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மன்றம் கூட்டத்தின் 'மினிட் புத்தகம்' ஆய்வு செய்து, அந்த புத்தகத்தை கையில் எடுத்து சென்றார்.
மேலும், 'மன்றக் கூட்டம் யாருடைய துாண்டுதல்படி ரத்து செய்யப்பட்டது; இதனால் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளது குறித்து என்ன நினைக்கிறீர்கள்' உள்ளிட்ட கேள்விகளுக்கு, மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மேயர் உதயகுமாருக்கு கடிதம் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
*பல்வேறு இழுப்பறிக்கு பின், ஆவடி மாமன்ற கூட்டம், நேற்று மீண்டும் நடந்தது. இதில், கவுன்சிலர்கள் பலர் தங்கள் பகுதி பிரச்னைகள் குறித்து தெரிவித்தனர். ஆனால், பலர் பேசும் போது குறுக்கே புகுந்து, மண்டல குழு தலைவர் ராஜேந்திரன் பேச விடாமல் தடுத்தது சலசலப்பை ஏற்படுத்தியது.* கடந்த மாமன்ற கூட்டங்களில் உற்சாகத்துடன் செயலாற்றிய, மண்டல பணிக்குழு தவைவரும், தி.மு.க., - எம்.எல்.ஏ., நாசரின் மகனுமான ஆசிம் ராஜா நேற்றை கூட்டத்தில் 'கப் சிப்' எனக் காணப்பட்டார்.