அம்பத்துார், தனியார் வங்கியான ஹெச்.டி.எப்.சி.,யின் ஏ.டி.எம்., மையங்களில் பணத்தை இருப்பு வைக்கும் பணியை, அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், நேற்று முன்தினம் காலை முதல் ஆவடி, அம்பத்துார் சுற்றுவட்டார ஏ.டி.எம்., மையங்களில் பணம் இருப்பு வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மாலை, அம்பத்துார் தொழிற்பேட்டை, சி.டி.எச்., சாலை சந்திப்பில், பிரபல உணவகம் அருகே உள்ள, ஏ.டி.எம்., மையத்தில் பணம் நிரப்பினர்.
அதை தொடர்ந்து, ஊழியர்கள் வாகனத்தில் ஏறுவதற்கு முன், அதன் ஓட்டுனரான கொடுங்கையூரைச் சேர்ந்த அமீர் பாஷா, 47, என்பவர் வாகனத்தை ஓட்டிச்சென்றார். அதில், 35.50 லட்சம் ரூபாய் இருந்தது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், இது குறித்து அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் திருவள்ளுவர் தலைமையிலான போலீசார், ஜி.பி.எஸ்., கருவி சிக்னல் மூலம் வாகனத்தை தேடியதில், மாதவரம் நெடுஞ்சாலையில் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, மாதவரம், மூலக்கடை சந்திப்பு அருகே, அன்றைய தினம் நள்ளிரவு வாகனத்தை மடக்கி, அமீர் பாஷாவை கைது செய்தனர். பணம் திருவான்மியூரில் உள்ள தனியார் வங்கி கிளையில் ஒப்படைக்கப்பட்டது.