திருநின்றவூர், ஆவடி அடுத்த திருநின்றவூர் ரயில் நிலையத்தில், நேற்று அதிகாலை, இன்ஜின் வாயிலாக, ரயில் இருப்பு பாதை சோதனை செய்யப்பட்டது.
அப்போது, அரக்கோணம் செல்லும் மார்க்கத்தில், தண்டவாளத்தின் குறுக்கே தென்னை மரக்கட்டை கிடந்தது.
இது குறித்து ஆவடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையிலான குழு இது குறித்து நேற்று ஆய்வு செய்தனர்.
திருநின்றவூர், நேரு நகரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், வீட்டை இடித்து, மரங்களை வெட்டி அகற்றியுள்ளார்.
அகற்றப்பட்ட தென்னை மரக்கட்டையை தண்டவாளத்தின் ஓரத்தில் போட்டு வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, மதுபோதையில் சிலர், மரக்கட்டையை தண்டவாளத்தின் குறுக்கே வீசி சென்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
செந்தில்குமாருக்கு அபராதம் விதித்த ரயில்வே போலீசார், சந்தேகத்திற்கிடமான சிலரிடம் விசாரித்து வருகின்றனர்.