திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்ட அரிசிக் கொம்பன் யானை, கோதையாறு அணை அருகே சுற்றிக் கொண்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தில் திரிந்த அரிசிக் கொம்பன் யானை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு வனத்துறை வாகனம் வாயிலாக திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மணிமுத்தாறு அணைக்கு மேல், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்டது.
இந்தக் காப்பக பகுதியை ஒட்டி உள்ள கன்னியாகுமரி மாவட்டம் முத்துக்குளி வயல் பகுதி புல்வெளிகள் நிறைந்த யானைகளின் வசிப்பிடமாகும்.
எனவே, அரிசிக் கொம்பன் யானையை நேற்று முன் தினம் அதிகாலையில் அங்கு கொண்டு வந்து விட்டனர்.
அங்கிருந்த யானை, கோதையாறு அணைப்பகுதிக்கு வந்து அங்கு சுற்றிக் கொண்டுள்ளது.
யானையின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள 'ரேடியோ காலர்' கருவி வாயிலாக அதன் இருப்பிடம் துல்லியமாக கண்காணிக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்ட வனத்துறையினர் மற்றும் தேனியில் இருந்து வந்துள்ள வன அதிகாரிகள் கோதையாறு பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
யானை மேலும் சில நாட்களுக்கு கண்காணிப்பில் இருக்கும். அங்குள்ள மற்ற யானைக் கூட்டங்களுடன் இணைகிறதா என்பதையும் பார்க்க வேண்டும். ஒரு சில நாட்களுக்குப் பின், அரிசிக் கொம்பன் யானைக்கு அந்தப் பகுதியில் ஒவ்வாமை ஏற்பட்டால் மீண்டும் மக்கள் வசிப்பிடம் நோக்கி அரிசி, சர்க்கரை என ரேஷன் கடை உணவு பொருட்களை தேடி வரக்கூடும் என்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பழங்குடியினர் ஆர்ப்பாட்டம்
-முத்துக்குளி வயல், அடர்ந்த காட்டுப் பகுதி என்றாலும் அரிசிக் கொம்பன் எல்லை தாண்டி வேறு பகுதிகளுக்கு செல்லலாம் என, பழங்குடியினர் அச்சம் அடைந்துள்ளனர்.
முத்துக்குளி வயலில் இருந்து யானை குமரி மாவட்ட வனப் பகுதிகளுக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், இதனால் தங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளது என, பேச்சிப்பாறை, கோதையார் சுற்றுவட்டார பழங்குடியினர் கூறுகின்றனர்.
வன விலங்குகளால் ஏற்கனவே பயிர்கள் சேதம், உயிர்ச்சேதம் என மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரிசிக் கொம்பன் யானையால் தாங்கள் தாக்கப்படலாம் என அச்சம் அடைந்துள்ளனர். தச்சமலை பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர், அங்குள்ள அரசுப் பள்ளி அருகே நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கொம்பன் நலம்
யானையை அழைத்துச் சென்ற டிரைவர்கள் கூறுகையில், “யானையின் தும்பிக்கையில் ஏற்பட்டிருந்த காயத்துக்கு மருந்து போடப்பட்டு, அடர்ந்த காட்டுப் பகுதியில் யானை திறந்து விடப்பட்டது. சுமார் 400 மீட்டர் துாரம் யானை காட்டுக்குள் சென்றது.
அரிசிக் கொம்பன் யானை நலமாக இருக்கிறது.
புலிகள் காப்பகமாக திகழும் அகத்திய மலை யானைகள் காப்பகமாகவும் விளங்குகிறது.
ஆண்டு முழுதும் தண்ணீர் கிடைக்கும் பகுதி மட்டுமல்ல யானைக்கு தேவையான உணவும் இங்கு கிடைக்கும் 'என்றனர்.
நீதிபதிகள் மாற்றம்
அரிசிக் கொம்பன் யானையை, கேரள மாநிலம் மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா மற்றும் சின்னக்கானல் பகுதிக்கு மாற்றக் கோரிய வழக்கு விசாரணையை, வனத்துறை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.