கோயம்பேடு, சென்னையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் வைத்து, அ.தி.மு.க., ஆட்சியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால், ஒவ்வொரு மாநகராட்சி வார்டுகளிலும், 'அம்மா' குடிநீர் மையம் துவக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு, மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்த குடிநீர் மையத்தில், ஒரு மணி நேரத்திற்கு, 3,000 லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதாவின் மறைவிற்கு பின், பெரும்பாலான இடங்களில் அம்மா குடிநீர் மையம் செயல்படவில்லை.
தற்போது, ஆட்சி மாற்றத்திற்கு பின், பல்வேறு இடங்களில் உள்ள அம்மா குடிநீர் மையம் மூடப்பட்ட நிலையில் உள்ளன.இயந்திரம் பழுது மற்றும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அதிகாரிகள், அதை சீரமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
கோடம்பாக்கம் மண்டலம், 127 வது வார்டு, கோயம்பேடு, அவ்வை திருநகரில் திறக்கப்பட்ட குடிநீர் மையம், சில மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் கடைகளில் அதிக விலை கொடுத்து, 'கேன் வாட்டர்' வாங்கும் நிலை உள்ளது.
எனவே, பூட்டி கிடக்கும் அம்மா குடிநீர் மையத்தை திறக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.