சென்னைகுரோம்பேட்டையைச் சேர்ந்த சாலமன் ராஜா, கடந்த 2021-ல் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், 'தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை வீரராகவன் ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஏரிக்குள் கழிவு நீர் விடப்படுவதை தடுத்து, ஏரியை பாதுகாக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாயம், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, தாம்பரம் மாநகராட்சி மற்றும் வருவாய் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு, இந்த வழக்கு பற்றி எந்த விபரமும் தெரியவில்லை. வழக்கு தொடர்பான எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை.
கடந்த ஏப்., 13ல் இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் குறித்து குழப்பமான தகவல்களை, அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனால், மனுதாரர் சாலமன் ராஜாவை நேரில் ஆஜராக, தீர்ப்பாயம் உத்தரவிட்டது; அவர் ஆஜராகவில்லை.
எனவே, குரோம்பேட்டை, நியூ காலனியைச் சேர்ந்த மனுதாரர் சாலமன் ராஜா, அடுத்த விசாரணை நடக்கும், ஆக., 14ல் ஆஜராக வேண்டும்.
அப்போது, ஆதார் உள்ளிட்ட புகைப்பட அடையாள அட்டைகளை எடுத்து வர வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.