ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் பகுதியில் அடுத்தடுத்து பெய்த மழையால் முருங்கை மகசூல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது.
ஒட்டன்சத்திரம், கப்பலப்பட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, சாலைப்புதுார் ஆகிய பகுதிகளில் முருங்கை அதிகமாக விளைகிறது. கரும்பு முருங்கை, செடி முருங்கை, மர முருங்கை என மூன்று வகையாக முருங்கைக்காய் இங்கு விளைகின்றன.
ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் முருங்கை மரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பலத்த மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் முருங்கைச் செடிகளில் இருந்த பூக்கள் உதிர்ந்தன.
முருங்கைப் பிஞ்சுகளில் மழைநீர் இறங்கியதால் காய்ந்தன. இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வரத்து மிகவும் குறைந்தது.
செடி முருங்கை விலை படிப்படியாக அதிகரித்து தற்போது ஒரு கிலோ 75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து, அரசப்பபிள்ளைபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி கூறியதாவது, “மூன்று ஏக்கரில் முருங்கை நடவு செய்துள்ளேன். மழைக்கு முன் விளைச்சல் நன்றாக இருந்தால் வரத்து அதிகரித்து ஒரு கிலோ 12 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சில நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்ததால் முருங்கை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வரத்து குறைந்து மார்க்கெட்டில் விலை அதிகரித்து விட்டது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தற்போது ஒரு கிலோ முருங்கை 75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அடுத்து வரும் நாட்களில் தற்போதுள்ள முருங்கை பிஞ்சுகள் அறுவடைக்கு தயாராகி விடும். அப்போது மீண்டும் விலை சரிய வாய்ப்புள்ளது,” என்றார்.