மூணாறு:மூணாறு அருகே மாட்டுபட்டி அணையில் சுற்றுலா படகுகள் மோதிய சம்பவத்தில் மின்வாரியத்தின் ஹைடல் டூரிசம் சார்பிலான சுற்றுலா படகு டிரைவர் பழைய மூணாறைச் சேர்ந்த முருகேசனை பணிக்கு அனுமதிக்கக் கூடாது என துறை இயக்குனர் நரேந்திரநாத் வெல்லூரி உத்தரவிட்டார்.
கேரள மாநிலம் மூணாறு அருகில் உள்ள மாட்டுபட்டி அணையில் இடுக்கி மாவட்ட சுற்றுலா துறை, மின்வாரியத்தின் ஹைடல் டூரிசம் சார்பில் அதிவேக படகுகள் உட்பட பல்வேறு வகை சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன.
அங்கு சென்னையைச் சேர்ந்த கணவன், மனைவி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட குழு மே 23ல் மாவட்ட சுற்றுலா துறைக்குச் சொந்தமான அதிவேக படகில் பயணம் செய்தபோது எதிர்பாராத வகையில் ஹைடல் டூரிசத்திற்குச் சொந்தமான அதிவேக படகு மோதியது. அதில் நிலைகுலைந்த அப்பயணிகள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். சுற்றுலாதுறைக்குச் சொந்தமான படகு சேதமடைந்தது.
அச்சம்பவம் குறித்து ஹைடல் டூரிசம் வட்டார மேலாளர் ஹரிஷ் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தது. அதன்படி டூரிசம் படகை இயக்கிய டிரைவர் முருகேசனை பணிக்கு அனுமதிக்க கூடாது என அத்துறை இயக்குனர் நரேந்திரநாத் வெல்லூரி உத்தரவிட்டார்.
இதனிடையே விபத்தில் சேதமடைந்த சுற்றுலா துறைக்குச் சொந்தமான படகிற்கு இழப்பீடுவழங்குமாறு ஹைடல் டூரிசத்தினரிடம் முறையிட போவதாக மாவட்ட சுற்றுலா துறை செயலர் ஜிதீஷ்ஜோஸ் தெரிவித்தார்.