பட்டினப்பாக்கம், சென்னை, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியில், கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது. கடலின் இயல்பு தன்மையும் மாறுகிறது. தொடர் கடல் அரிப்பால், மீனவ கிராமங்களில் கடல் நீர் புகும் அபாயம் உள்ளது.
கரையில் நிறுத்தி வைக்கப்படும் சிறிய நாட்டு படகுகள், கடலுக்குள் இழுத்து செல்லும் நிலையும், வலைகள் சேதமடையும் அபாயமும் இருப்பதாக, மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். சில இடங்களில், பாறைகளை போட்டு, கடல் அரிப்பை தற்காலிகமாக தடுத்து வருகின்றனர்.
கடல் சுவர் எழுப்பவது, துாண்டில் வளைவு அமைப்பதே கடல் அரிப்பை தடுக்க முழு தீர்வாகும் என, அவர்கள் தெரிவித்தனர்.
அப்பகுதி மீனவர்கள் சிலர் கூறியதாவது:
கடந்த 2004ல் ஏற்பட்ட சுனாமி மற்றும் அதைத்தொடர்ந்து வீசிய புயல்கள், இயற்கை சீற்றங்களால் கடலின் இயல்பு தன்மை மாறியுள்ளது. 2011ம் ஆண்டில் தானே புயல் ஏற்படுத்திய சேதத்திற்கு பின், கடலின் தன்மை முற்றிலும் மாறி உள்ளது.
மீனவர்கள் கூட கடலின் குணத்தை கணிக்க முடியவில்லை. அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் கடலின் சீற்றம் அதிகம் காணப்படுகிறது. நிலப்பகுதியில் 10 அடி வரை கடல் நீர் புகுகிறது.
இதனால் மீன் பிடி தொழில் பாதிக்கிறது. மீனவ குடியிருப்புகளும் சேதமடைகின்றன. கடல் அரிப்பை தடுப்பதற்கு இப்பகுதியில் துாண்டில் வளைவு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.