சென்னை:தஞ்சாவூர் ஸ்டேடியத்தின் ஓடுபாதை பணி முடியாததற்கு ஒப்பந்ததாரர் தான் காரணம் என, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூரில் உள்ளது அன்னை சத்யா விளையாட்டு மைதானம். இதன் ஓடுதளத்தை தரம் உயர்த்தும் வகையில், 'சிந்தடிக் டிராக்' எனும் நவீன பாதை அமைக்க, மூன்றாண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் விடப்பட்டது. மும்பை நிறுவனம் ஒன்று, ஆறு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து, உப ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், விளக்குகள் பொருத்தி, ஓடுதளத்துக்கான பள்ளம் தோண்டியபின் ஒப்பந்ததாரர் பணியைத் தொடரவில்லை.
இந்நிலையில், ஒப்பந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர் ஆனந்த் என்பவர், நம் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பணி செய்ததற்கான தொகையை தமிழக அரசு காலம் தாழ்த்துவதாக கூறியிருந்தார்.
இதுகுறித்து, தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரிகள் அளித்த விளக்கம்:
தஞ்சாவூர் அன்னை சத்யா ஸ்டேடியத்தில் நடைபெற்ற பணிக்காக, 1.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மற்ற பணிகள் ஆண்டுக்கணக்கில் முடிக்கப்படாமல் இருப்பதை அறிந்து, அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இரண்டு மாதங்கள் ஆகின்றன. மேலும், பணிகளை முடித்ததற்கான ரசீதுகளை ஒப்படைத்தால், உடனடியாக தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும், ஒப்பந்ததார் இதுவரை உரிய விளக்கம் அளிக்கவில்லை. அதனால், ஒப்பந்ததாரர் பட்டியலில் இருந்து நீக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையறிந்து, ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் தவறான தகவல்களை கூறுகின்றனர்.
அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், சத்யா ஸ்டேடிய பணிகளை, தரமாகவும், விரைந்தும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.