அடையாறு, அடையாறு மண்டலத்தில், 13 வார்டுகள் உள்ளன. இதில், 178வது வார்டு, பள்ளிப்பட்டு பகுதியில், 1.70 கோடி லிட்டரில் கீழ்நிலை மற்றும் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் உள்ளன.
வீராணம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து எடுத்து வரப்படும் குடிநீர், 173, 174, 178, 179, 180 ஆகிய வார்டுகளுக்கு, தினமும் காலையில், 1.50 கோடி லிட்டர் வழங்கப்படுகிறது.
மேலும், 169, 170, 173 ஆகிய வார்டுகளுக்கு, மாலையில் 1.50 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.
பள்ளிப்பட்டு நீர்தேக்கத் தொட்டியில் இருந்து, 200 முதல் 900 எம்.எம்., வரை அளவு உடைய குழாய், ஓ.எம்.ஆர்., என்ற பழைய மாமல்லபுரம் சாலையின் குறுக்கே, இந்திரா நகர் வழியாக பதிக்கப்பட்டு உள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன், குழாயில் கழிவுநீர் கலந்ததுடன், நீரோட்டம் குறைவாக சென்றது. இதனால், அடையாறு, பெசன்ட் நகர், தரமணி, திருவான்மியூர் பகுதியில் குடிநீர் வினியோகம் தடைப்பட்டது.
நீண்ட ஆய்வுக்கு பின், ஓ.எம்.ஆரில் வாகனங்கள் அதிகமாக செல்வதால், அதிக அழுத்தம் காரணமாக, குழாயில் விரிசல் ஏற்பட்டது தெரிந்தது.
மேலும், அருகில் கழிவுநீர் குழாய் மற்றும் வடிகால் உள்ளதால், குடிநீரில் கழிவு நீர் கலந்ததும் தெரிந்தது.
இதையடுத்து, ஓ.எம்.ஆரின் குறுக்கே சென்ற குழாயை மாற்றி, புதிதாக இணைக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியானதால், இரவு நேரத்தில் பணி நடந்தது.
இதனால், குடிநீரில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்பட்டதுடன், நீரோட்டம் அதிகரித்து, தேவைக்கு ஏற்ப குடிநீர் வழங்கப்படுவதாக, வாரிய அதிகாரிகள் கூறினர்.