திருப்பூர்: வடமாநிலங்களில் ரயில் இயக்கத்தில், சிக்னல் பெறுவதில், அடுத்தடுத்து ரயில்களை அனுப்பி வைப்பதில், தாமதம் நிலவுவதால், தமிழகம் வரும் ரயில்கள் தாமதமாகியுள்ளது.
ம.பி., மாநிலம், இந்துாரில் இருந்து, கேரள மாநிலம், கொச்சுவேலிக்கு திங்கள்தோறும் இயக்கப்படும், அகல்யாநகரி சூப்பர்பாஸ்ட் (எண்:22645) ரயில், நேற்று முன்தினம், 10:50 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டும். மூன்று மணி நேரம் தாமதமாக, நேற்று காலை, 2:05 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. திருப்பூருக்கு, காலை, 5:45 மணிக்கு பதில், மூன்று மணி நேரம், 25 நிமிடம் தாமதமாக, 9:10 மணிக்கு வந்தது; கோவைக்கு, 6:50க்கு பதில், 10:00 மணிக்கு சென்று சேர்ந்தது.
அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் (எண்:22504) காலை 9:45 மணிக்கு திருப்பூர் வர வேண்டும். ஆனால், நான்கு மணி நேரம், 30 நிமிடம் தாமதமாக மதியம், 2:15 மணிக்கு திருப்பூரை கடந்தது. காலை, 10:45 மணிக்கு பதில், மதியம், 3:40 மணிக்கு கோவை சென்றது.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ''ஒரு ரயில் அல்லது வழித்தடத்தில் தாமதம் ஏற்பட்டால், சிக்னல் பெறுவதில், அடுத்தடுத்து ரயில்களை அனுப்பி வைப்பதில், தாமதம் ஏற்படுகிறது. இதனால்தான், தமிழகம் வந்த திப்ரூகர், இந்துார் ரயில்கள் தாமதமாகியுள்ளது'' என்றனர்.