பெருங்களத்துார், புது பெருங்களத்துார் பகுதியில், குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளது. வள்ளலார் தெரு, நேரு தெரு, சாமிநாதன் தெரு, இந்திராகாந்தி சாலை, சரோஜினி தெரு, காமராஜ புரம்.
அருணகிரி நாதர் தெரு, காமாட்சியம்மன் கோவில் பின்புறம், ஆர்.எம்.கே., நகர் ஆகிய பகுதிகளில், குரங்குகளின் தொல்லை பன்மடங்கு அதிகரித்து விட்டது.
பத்துக்கும் மேற்பட்ட குரங்குகள், தினமும் காலை 5:00 மணி முதல் காலை 11:00 மணி வரை, மாலை, 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.
காய்கறிகளை சாப்பிடுவது, உணவுகளை நாசப்படுத்துவது, கடைகளுக்கு சென்று வருவோரின் பைகளை பிடுங்குவது, துரத்தினால் கடிக்க வருவது என, மக்களை பாடாய்படுத்துகின்றன.
தற்போது கோடை காலம் என்பதால், அருகேயுள்ள காட்டில் தண்ணீர், உணவு கிடைக்காததால், குடியிருப்புகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
வனத்துறை, தீயணைப்பு துறையினருக்கு புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.
குடியிருப்புகளில் புகுந்து அட்டகாசம் செய்யும், குரங்குகளை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.