சிவகங்கை:காரைக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நிதி நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நிறுவன இயக்குநர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை தலைமையிடமாக கொண்டு நியூ ரைஸ் ஆலயம் ஸ்மால் பைனான்ஸ் பாங்கிங் குரூப் ஆப் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதனுடன் 7 நிறுவனங்கள் இணைந்து நிதி நிறுவனங்களை உருவாக்கி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தன.
பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம், என மக்களிடம் ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் முதலீடு செய்ய வைத்துள்ளனர். முதிர்வு காலம் முடிந்து பணத்தை திருப்பி ெகாடுக்காததால் கடந்த ஆண்டு மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.
ராஜா, மாதவன், மகேந்திரன், தங்கேஸ்வரி, பழனியப்பன், பவுல் ஆரோக்கியசாமி, அன்வர்உசேன் மற்றும் 49 பேர் சேர்ந்து இந்த நிறுவனங்களை நடத்தி வந்துள்ளனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிதி நிறுவனத்தில் இயக்குநர்களாக இருந்த காரைக்குடியை சேர்ந்த அன்வர்உசேன் 41 , அந்தோணிதனராஜ் 44 இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் புகாரளிக்காமல் இருந்தால் சிவகங்கை பொருளாதார குற்றப்பிரிவு, நாகுநகர், திருப்புத்துார் ரோடு, சிவகங்கை என்ற முகவரியில் புகார் தெரிவிக்கலாம், என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.