கோவை:''அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில், குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பும் சோதனை ஓட்டம், இம்மாத இறுதியில் நிறைவடையும்,'' என, கோவை மண்டல நீர்வள ஆதார அமைப்பு தலைமை பொறியாளர் சிவலிங்கம் கூறினார்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளை நீர் நிரப்பும் நோக்கத்தில், அவிநாசி - அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப் படுகிறது.
பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைகட்டின் கீழ்புறத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு, 1.5 டி.எம்சி., உபரி நீர், நீரேற்று முறையில், குழாய் மூலம் நீர் நிலைகளுக்கு கொண்டு செல்லப்படும்.
நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள, 32 குளங்கள், ஊராட்சி ஒன்றிய, 42 ஏரிகள், 971 குட்டைகளை நீர் நிரப்பும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது; 24 ஆயிரத்து, 468 ஏக்கர் நிலம் பயன்பெறும்.
அ.தி.மு.க., ஆட்சியில், 2019, டிச., 25ல் துவங்கப்பட்ட இப்பணி, 99 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.
6 நீரேற்று நிலையங்கள்
பவானி ஆற்றின் குறுக்கே திருப்பணை, பவானி, நல்லக்கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னுார் ஆகிய ஆறு இடங்களில், நீரேற்று நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.
கடந்த பிப்., மாதம் சோதனை ஓட்டம் துவக்கப்பட்டது. ஒவ்வொரு நீரேற்று நிலையமாக இயக்கி, பிரதான குழாய்களில் தண்ணீர் அனுப்பி, கிளை குழாய்கள் வழியாக குளம், குட்டைகளுக்கு செல்வது சோதனை செய்யப்படுகிறது.
மொத்தமுள்ள, 1,045 நீர் நிலைகளில், இதுவரை, 630 குளம், குட்டைகளில் சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது.
வரும், 30ம் தேதிக்குள் மீதமுள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் தருவிக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நிறைவு செய்யப்படும்.
அதன்பின், பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது.
'பேஸ்-2' ஆய்வு
கோவை மண்டல நீர்வள ஆதார அமைப்பு தலைமை பொறியாளர் சிவலிங்கம் கூறியதாவது:
அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில், 99 சதவீத பணிகள் முடிந்திருக்கின்றன.
இம்மாத இறுதிக்குள் சோதனை ஓட்டம் நிறைவடையும். ஒப்பந்த நிறுவனமே தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பராமரிக்கும்.
ஆறு நீரேற்று நிலையங்களிலும், மின்வாரியம் மூலமாக, பிரத்யேகமாக, தலா இரு துணை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒன்று பழுதானாலும் கூட, மற்றொன்று வாயிலாக மின் வினியோகம் செய்து, குளம், குட்டைகளுக்கு நீர் அனுப்பப்படும்.
மற்ற குளங்களை இணைத்து, அவிநாசி - அத்திக்கடவு பேஸ்-2 தொடர்பாக, திட்டம் வடிவமைப்பு குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.