போரூர், 'போரூர் ஏரியில் உபரி நீர் வெளியேற, மதகு கலங்கல் மற்றும் கால்வாய் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது' என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையின் நீராதாரங்களில் ஒன்றாக போரூர் ஏரி உள்ளது. இங்கு, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, 12 கி.மீ., துாரம் பயணிக்கும் தந்தி கால்வாய் வழியாக நீர்வரத்து உள்ளது.
போரூர் ஏரி நிரம்பி, கலங்கல் வழியாக வெளியேறும் உபரிநீர், மணப்பாக்கம் கால்வாய் வழியாக, அடையாறு ஆற்றுக்கு செல்ல வேண்டும். ஆக்கிரமிப்பால் இந்த நீர்வழித்தடங்கள் மாயமாயின.
போரூர் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற முறையான கால்வாய் இல்லாத காரணத்தால், பருவமழை காலங்களில் ஏரியின் சுற்றுவட்டார 15 கிராமங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாக இருந்தது. இதனால் மாதக்கணக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதற்கு தீர்வாக, மணப்பாக்கம் கால்வாய் வழியாக, அடையாற்றுக்கு உபரி நீரை கொண்டு செல்ல, 2009ல் போக்கு கால்வாய் கட்ட பொதுப்பணித்துறை தீர்மானித்தது.
கிடப்பில் 6 ஆண்டுகள்
இதற்காக, 45 கோடி ரூபாய் செலவில், 2013 -- 14ல் பணிகள் துவங்கின. 70 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை, 2015ல் வழக்கு தொடர்ந்தது.
இதனால், பணிகள் கடந்த ஆறு ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டன. கடந்த 2018ல் கால்வாய் அமைக்க தடையில்லா சான்று கிடைத்ததும், விடுபட்ட பணிக்கு, 20 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரித்து, அரசு அனுமதிக்கு அதிகாரிகள் அனுப்பியும் நிதி ஒதுக்கப்படவில்லை.
இந்த நிலையில், கால்வாய் பணிகள் முடியாமல் கிடப்பில் போடப்பட்டதால், 2021ம் ஆண்டு பருவமழையின் போது, போரூர் ஏரி நிரம்பி வழிந்து, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
நம் நாளிதழ் எதிரொலி
இது குறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது. இதையடுத்து, 34 கோடி ரூபாய் செலவில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, கிடப்பில் இருந்த கால்வாய் பணி மீண்டும் துவக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், தந்தி கால்வாயில் இருந்து, 700 மீ., துாரத்திற்கு 16.7 கோடி ரூபாய் மதிப்பில் புது கால்வாய் அமைக்கப்பட்டு, அணுகு சாலையில் உள்ள உபரி நீர் கால்வாயுடன் இணைக்கப்பட்டது.
இந்த இரு கால்வாய்களையும், மணப்பாக்கம் கால்வாயில் இணைக்க, 10.3 கோடி ரூபாய் மதிப்பில் தாம்பரம் பை - பாஸ் சாலையின் குறுக்கே இரு சுரங்கப்பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டன.
இதில், ஒரு சுரங்கப்பாதை பணி நிறைவு பெற்றுள்ளது. மற்றொரு சுரங்கப்பாதை பணி 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.
மேலும், மழைக்காலத்தில் போரூர் ஏரி நிரம்பும் போது, உபரி நீர் விரைவாக வெளியேற்ற மதனந்தபுரம், பெல் நகர் அருகே, 39 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மதகு மற்றும் கால்வாய் அமைக்க திட்டமிடப் பட்டது.
இதில், பெல் நகர் மதகில் இருந்து முகலிவாக்கம் ராமாபுரம் வழியாக அடையாறுக்கு 3.3 கிலோ மீட்டர் துாரத்திற்கு கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த கால்வாய் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
தற்போது, ஆங்காங்கே கால்வாய் இணைக்கும் பணிகள் நடக்கின்றன. மொத்தம் 100 கோடி ரூபாய் மதிப்பீடில் நடக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.
இப்பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவதாஸ் மீனா சமீபத்தில் ஆய்வு செய்தார்.
போரூர் ஏரியில் நடந்து வரும் புது மதகு மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகள் அனைத்தும், அடுத்த மாதம் இறுதிக்குள் நிறைவு பெறும். இப்பணிகள் நிறைவு பெறுவதுடன், போரூர் ஏரி உபரி நீரால், 15 கிராமங்களில் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் ஏற்பட்டு வந்த வெள்ள பாதிப்பிற்கும் தீர்வு கிடைக்கும்.
- பொதுப்பணி துறை அதிகாரிகள்.