நாமகிரிப்பேட்டை:ராசிபுரம் அருகே, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, நாமகிரிப்பேட்டை அடுத்த காமராஜ் நகரை சேர்ந்தவர் சுப்ரமணி, 70; ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். தற்போது, 'சவுண்ட் சிஸ்டம்' மற்றும் தண்ணீர் கேன் விற்பனை செய்து வந்தார். இவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.
மூவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
மனைவி, 10 ஆண்டுக்கு முன் இறந்ததால், சுப்ரமணி தனியாக வசித்து வந்தார். கடந்த 5ம் தேதி இரவு, சுப்ரமணி வீட்டுக்கு வெளியே துாங்கினார். நேற்று முன் தினம் காலை, அந்த வழியாக சென்றவர்கள், சுப்ரமணி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து, நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி., செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். துாங்கி கொண்டிருந்த சுப்ரமணி தலையில், கட்டையால் தாக்கி கொலை செய்திருப்பது தெரிந்தது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து, போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.