திருப்பூர்: திருப்பூரில் அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த நபரின் டைரி சிக்கியதால், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் அதிரடி விசாரணையில் களமிறங்கியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், பள்ளிபாளையத்தில் ரேஷன் கடை செயல்படுகிறது. பெருமாநல்லுார் கூட்டுறவு சங்கத்துக்குட்பட்ட இக்கடையில், நேற்றுமுன்தினம் மாலை, கடையில், பொருட்கள் வாங்குவதுபோல் வரிசையில் நின்ற இளைஞர், விற்பனையாளரிடம் 100 கிலோ ரேஷன் அரிசி கேட்டுள்ளார்.
சந்தேகமடைந்த பொதுமக்கள், இளைஞரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்; அவரது பாக்கெட்டில் வைத்திருந்த மினி டைரியில், தேதி வாரியாக, எந்தெந்தநாளில் யார் யாரிடமிருந்து எவ்வளவு ரேஷன் அரிசி வாங்கப்பட்டது; எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது; டூவீலர் பெட்ரோல் செலவு, சாப்பாடு செலவு விவரங்கள் இடம் பெற்றிருந்தன. அதிகபட்சம் 300 கிலோ வரை ரேஷன் அரிசியை வாங்கியது தெரியவந்துள்ளது.
கிலோவுக்கு 7 ரூபாய் என விலை நிர்ணயித்து, அரிசி வாங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் திரண்டதையடுத்து, இளைஞர் தப்பி ஓடிவிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ''ரேஷன் பணியாளர் பட்டியலை பெற்று, கடத்தல் ஆசாமியின் டைரி குறிப்பில் உள்ள பெயருடன் ஒத்துப்போகிறதா என ஆராயப்படும்.
ரேஷன் கடைகளில் நடந்த அரிசி விற்பனை; இருப்பு குறித்து கூட்டுறவு அதிகாரிகள் ஆய்வு செய்வர். இருப்பு குறைந்திருப்பின், உணவு பொருள் கடத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.