கரூர்:''தமிழக சட்டசபைக்கு எப்போது தேர்தல் நடந்தாலும், அ.தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெறும்,'' என, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.
தமிழக அரசை கண்டித்து, மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:
முன்னாள் நிதி அமைச்சர் தியாகராஜன் பேசியதாக, '30 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்து விட்டனர்' என, வெளிவந்த ஆடியோவால், அவரது துறை மாற்றப்பட்டது.
ஆனால், டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடப்பதாக தகவல்கள் வெளிவந்த பிறகும், கள்ளச்சாராயம் குடித்து, பலர் உயிரிழந்த நிலையிலும், கரூரில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய போதும், உள்ளூர் அமைச்சரின் துறையை கூட மாற்றவில்லை.
தி.மு.க., ஆட்சியில் கள்ளச்சாராயம்,போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதை, டி.ஜி.பி., சைலேந்திர பாபு மறுக்கிறார். போலீசார் சோதனையில், 22 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
அ.தி.மு.க., ஆட்சியில் பெண்கள் மீது தாக்குதல் நடந்தால், தி.மு.க., - எம்.பி., கனிமொழி கொதித்து எழுவார். கரூரில் வருமான வரித் துறை பெண் அதிகாரி மீது, தி.மு.க.,வின் மகளிர் அணியினர் தாக்கினர். இப்போது கனிமொழி எங்கே போனார் என, தெரியவில்லை.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத, தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். விரைவில் மின் கட்டணம், பஸ் கட்டணம் உயர போகிறது. தமிழகம் முழுதும், 5,000 பஸ்களை நிறுத்தி விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
முதல்வர் ஸ்டாலினுக்கு எதுவும் தெரியவில்லை. தமிழகத்தில் எப்போது சட்டசபை தேர்தல் நடந்தாலும், 200 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.