ப.வேலுார்:ஜேடர்பாளையம் படுகையணை, ராஜா வாய்க்காலில் குளித்த கல்லுாரி மாணவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார். இறப்பில் சந்தேகமிருப்பதாக கூறி, அவரது தந்தை போலீசில் புகாரளித்தார்.
தேனி மாவட்டம், மார்க்கேயன்கோட்டை அருகே, அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகன் சிரஞ்சீவி, 20; இவர், நாமக்கல் மாவட்டம், பரமத்தி அடுத்த மேல் சாத்தம்பூரில் உள்ள தனியார் கலைக்கல்லுாரியில், இரண்டாமாண்டு படித்து வந்தார்.
பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு, ஜேடர்பாளையம் அடுத்த அரசம்பாளையத்தில் உள்ள நண்பரின் வீட்டில் தங்கி கல்லுாரிக்கு சென்று வந்தார். கடந்த 5ம் தேதி, ஜேடர்பாளையம் படுகையணையில் உள்ள ராஜா வாய்க்காலில், நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். ஜேடர்பாளையம் போலீசார் மீனவர் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.
இதையடுத்து, மாணவனின் தந்தை சவுந்தரபாண்டியன், தன் மகன் சாவில் சந்தேகமிருப்பதாக கூறி, ஜேடர்பாளையம் போலீசில் புகாரளித்தார். மேலும், சிரஞ்சீவியுடன் குளிக்கச்சென்ற மற்ற நால்வரிடமும் விசாரணை நடத்தினால் மட்டுமே, உடலை பிரேத பரிசோதனை செய்ய சம்மதிப்பேன் எனக்கூறி அடம் பிடித்தார். ஜேடர்பாளையம் போலீசார் உரிய விசாரணை நடத்தப்படும் என, தெரிவித்ததையடுத்து, நேற்று முன் தினம் மதியம், 2:30 மணிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சடலத்தை பெற்றுச்சென்றனர்.