சிவகங்கை:தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியின் போது கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றுவோம், என உறுதியளித்திருந்தது.
இன்று வரை அதற்கான நடவடிக்கை எடுக்காதது வருத்தத்தை அளிப்பதாகவும், ஆசிரியர் தகுதித்தேர்வினை முற்றிலும் களைய வேண்டும், என பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் எஸ்.சேதுசெல்வம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கட்டாய கல்வி சட்டம் 2009 ல் இயற்றப்பட்டது. அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி வழங்குவது கட்டாயமாகும். அதன்படி இன்று நடப்பதில்லை. இந்த சட்டத்தை அமல்படுத்த உருவாக்கிய பல விதிமுறைகள் ஆசிரியர்களை பழிவாங்க உருவாக்கப்பட்டவை.
ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு, பதவி உயர்வுக்கான தகுதித்தேர்வு என ஆசிரியர்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது.
ஆசிரியர்களை நியமிப்பதும், கல்வித்தகுதியை நிர்ணயிப்பதும், ஊதியம் வழங்குவதும், பணி விதிமுறைகளை உருவாக்குவதும், ஓய்வு பெறும் வயதை தீர்மானிப்பதும் மாநில அரசிடம் இருக்கிறது.
ஆனால் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசு விதிமுறைகளை திணிப்பது எந்த வகையில் நியாயம்.
பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வருவோம், என தேர்தல் வாக்குறுதி அளித்த அரசு அதற்கான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.
ஆசிரியர்களை கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கும் தகுதித்தேர்வின் கோரப்பிடியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.