தர்மபுரி:தர்மபுரி நகராட்சி தி.மு.க., கவுன்சிலரின் மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி அடுத்த நரசிங்காபுரம் கோம்பை வனப்பகுதியில் நேற்று காலை, 6:45 மணியளவில் இளம்பெண் ஒருவர், வாயில் துணி வைத்து கட்டப்பட்டும், கழுத்து நெரிக்கப்பட்ட நிலையிலும் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அதியமான்கோட்டை போலீசார், பெண்ணின் உடலை மீட்டு விசாரித்தனர். இதில், கொலையானவர், பழைய தர்மபுரி, ரயில்வே லைனைச் சேர்ந்த, தர்மபுரி நகராட்சி, 8வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் புவனேஸ்வரன் மகள் ஹர்ஷா, 23, என, தெரிந்தது. அவருக்கு திருமணம் ஆகவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவரை கடத்தி வந்து, கொலை செய்து, நரசிங்காபுரம் கோம்பை பகுதியில் உடலை வீசி சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது காதல் பிரச்னையால் நடந்த கொலையா அல்லது வேறு காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.