சோமனுார்:''நிலுவையில் உள்ள மின் கட்டணத்துக்கான அபராதம் மற்றும் வட்டியை ரத்து செய்யும் வரை மின் கட்டணத்தை செலுத்துவதில்லை,'' என, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், அவிநாசி சங்க தலைவர் முத்துசாமி தலைமையில், சோமனூரில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், மின் கட்டண நிலுவை, அபராதம் மற்றும் வட்டி விதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. சோமனூர் சங்க துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், தெக்கலுார் தலைவர் பொன்னுசாமி, துணை செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் பூபதி உள்ளிட்டோர் பேசினர்.
விசைத்தறி டேரிப் 3 ஏ 2ல் சாதா விசைத்தறிக்கு மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அபராதம், வட்டியை ரத்து செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த ஒன்பது மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் உள்ளது. இதனால், விசைத்தறியாளர்களுக்கு சுமை அதிகரித்துள்ளது. மின் கட்டணத்தை, யூனிட் ஒன்றுக்கு 70 பைசா குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.40 என்றே கணக்கீடு செய்யப்படுகிறது. நிலுவை தொகைக்கு அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்படுகிறது.
இவற்றை ரத்து செய்ய கோரி பலமுறை அரசிடமும், மின் வாரிய அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை.
அதனால், அபராதம், வட்டியை ரத்து செய்து, குறைக்கப்பட்ட மின் கட்டணத்தின் படி மறு கணக்கீடு செய்ய வேண்டும். இதுகுறித்து முறையான அறிவிப்பை அரசு வெளியிடும் வரை, மின் கட்டணம் செலுத்துவதில்லை, என, கூட்டு கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.