சேலம்:பட்டப்பகலில் வீடு புகுந்து, மூதாட்டி கழுத்தறுத்து நகை பறித்த பெண்ணை, மக்கள் சுற்றிவளைத்து, 'கவனிப்பு' செய்த பின் போலீசில் ஒப்படைத்தனர்.
சேலம், தாதகாப்பட்டி, சவுந்தர் நகரைச் சேர்ந்தவர் நசீர், 45; மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலக இளநிலை உதவியாளர். இவரது தாய் மெஹருன்னிசா, 73. இவர், மேல் வீட்டில் வசிக்கிறார்.
நேற்று காலை, 11:00 மணிக்கு, 'பர்தா' அணிந்து வந்த பெண், குடிக்க தண்ணீர் கேட்டார். மெஹருன்னிசா எடுக்கச் சென்றபோது, அவரை பின் தொடர்ந்து சென்ற பெண், கத்தியால் மெஹருன்னிசா கழுத்தில் குத்தி, அவரது தோடு, சங்கிலியை பறித்தார்.
மூதாட்டி கூச்சலிட, அப்பகுதி மக்கள் திரண்டு, பெண்ணை பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். பின், அன்னதானப்பட்டி போலீசாரிடம் பெண் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையில், தர்மலிங்கம் முதல் கிராஸ் பகுதியைச் சேர்ந்த பாஷா மனைவி ஜன்மா, 32, என்பதும், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மூதாட்டியை கத்தியால் குத்தி, நகை திருடியதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.