திருமங்கலம்:திருமங்கலம் அருகே நான்கு தலைமுறையைக் கண்ட, 98 வயது மூதாட்டி, தன் 105 வயது சகோதரியுடன், கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கூடக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த ராசு -- வேலாயி தம்பதிக்கு ஆறு மகன்கள், மூன்று மகள்கள். ராசு, 93 வயதில் இறந்து விட்டார். மகன், மகளுடன் வசிக்கும் வேலாயிக்கு தற்போது, 98 வயதுஆகிறது.
அவரது பிள்ளைகள், நான்கு தலைமுறையைச் சேர்ந்த, 60க்கும் மேற்பட்ட பேரன், பேத்திகள் வேலாயிக்கு பிறந்தநாள் கொண்டாட முடிவு செய்து, கூடக்கோவிலில் உள்ள இல்லத்தில் ஏற்பாடு செய்தனர்.
நேற்று நடந்த கொண்டாட்டத்தில், அவரது நான்கு தலைமுறை வாரிசுகளுடன், 105 வயதான அவரது சகோதரி கருப்பாயி அம்மாளும் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவ்வூரைச் சேர்ந்த உறவினர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று, மூதாட்டியரிடம் ஆசி பெற்றனர்.