மேட்டூர்:அனல் மின் நிலைய உதவி பொறியாளர் வீட்டில், 76 சவரன் நகைகள், 9 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த தொட்டில்பட்டி அனல் மின் நிலைய குடியிருப்பில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
கோடை விடுமுறைக்கு பலர் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு குடியிருப்பில் அடுத்தடுத்த ஐந்து வீடுகளில் திருடி உள்ளனர். பாதிக்கப்பட்டோர், கருமலைக்கூடல் போலீசில் புகார் அளித்தனர்.
அனல் மின் நிலைய உதவி பொறியாளர் சந்திரகலா, 41, என்பவர் வீட்டில், 76 சவரன் தங்க நகைகள், 9 லட்சம் ரூபாய் திருடுபோனது. அதேபோல், கதிரேசன் என்பவர் வீட்டில், 2 சவரன், 5,000 ரூபாய் திருடுபோனதாக போலீசார் தெரிவித்தனர்.
திருட்டு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.